திருச்சி அ.தி.மு.க., வேட்பாளர்பரஞ்ஜோதிக்கு எதிரான மனு: ஐகோர்ட் கிளை தள்ளுபடி
திருச்சி அ.தி.மு.க., வேட்பாளர்பரஞ்ஜோதிக்கு எதிரான மனு: ஐகோர்ட் கிளை தள்ளுபடி
ADDED : அக் 11, 2011 11:45 PM

மதுரை:திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதிக்கு எதிராக, பெண் டாக்டர் ராணி தாக்கல் செய்த மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ராணி தாக்கல் செய்த ரிட் மனு:நான் ஏற்கனவே திருமணம் ஆனவள். இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பரஞ்ஜோதி என்னிடம் பழகினார். பின், சென்னை திருவேற்காடு கோவிலில் என்னை திருமணம் செய்து கொண்டார். அவர் என்னை பணத்திற்காக திருமணம் செய்தது தெரிந்தது.
மேலும், எனக்கு சொந்தமான, 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்தை பறித்து கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் கொடுத்தேன். புகாரை வாபஸ் பெறும்படி பரஞ்ஜோதி, அவரது டிரைவர் மிரட்டுகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் போலீசில் புகார் கொடுத்த மறுநாளே கோர்ட்டை அணுகியுள்ளார். போலீஸ் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்கவில்லை. இது, சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் மீண்டும் போலீசை அணுகி புகார் செய்யலாம். தகுந்த பரிகாரம் கிடைக்காத பட்சத்தில், மீண்டும் ஐகோர்ட்டை அணுகலாம்.இவ்வாறு, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

