திருமண கோஷ்டி சென்ற பஸ் விபத்து:மணமக்கள் உட்பட 24 பேர் படுகாயம்
திருமண கோஷ்டி சென்ற பஸ் விபத்து:மணமக்கள் உட்பட 24 பேர் படுகாயம்
ADDED : ஜூலை 15, 2011 02:47 AM
விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே, திருமண கோஷ்டி சென்ற தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதியதில், மணமக்கள் உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் நாகலிங்கம், 28.
இவருக்கும், கும்பகோணம் ஆறுமுகம் மகள் தேவி, 25, என்பவருக்கும், ஆதனூரில் நேற்று திருமணம் நடந்தது.நிகழ்ச்சி முடிந்து மணமக்கள் மற்றும் உறவினர்கள் 60க்கும் மேற்பட்டோர், தனியார் வாடகை பஸ்சில், ஆதனூரில் இருந்து விருத்தாசலம் வழியாக, கும்பகோணம் சென்று கொண்டிருந்தனர். டிரைவர் பாஸ்கர் பஸ்சை ஓட்டி சென்றார்.கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் ஆக்சில் உடைந்து, அருகில் இருந்த புளியமரத்தில் மோதியது. பஸ்சில் பயணம் செய்த மணமகன் நாகலிங்கம், மணமகள் தேவி உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயமடைந்த சின்னபொண்ணு, பக்கிரி, சூர்யமூர்த்தி ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காம்மாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.