போக்குவரத்து ஊழியர்களை தி.மு.க., ஏமாற்றிவிட்டது: அமைச்சர் குற்றச்சாட்டு
போக்குவரத்து ஊழியர்களை தி.மு.க., ஏமாற்றிவிட்டது: அமைச்சர் குற்றச்சாட்டு
ADDED : செப் 08, 2011 11:22 PM

சென்னை:''தேர்தலைக் கருத்தில் கொண்டு ஒப்பந்தம்போட்டு, அதை நிறைவேற்றாமல், தி.மு.க., அரசு, போக்குவரத்து ஊழியர்களை ஏமாற்றிவிட்டது,'' என மானியக்கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.சட்டசபையில், போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையின் மீது நடந்த விவாதம்:
செந்தில்குமார் -தே.மு.தி.க: தி.மு.க., ஆட்சியில் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவித்து, விட்டுவிட்டனர்.
பஸ்சுக்குள் குடைபிடிக்கும் நிலை இருந்தது. பஸ் பாஸ் உள்ள மாணவர்களைப் பார்த்தால் பஸ்கள் சரியாக நிற்பதில்லை. 150 அடி தூரம் சென்றுதான் நிற்கிறது. மாணவர் சிறப்பு பஸ்கள் விட வேண்டும். தனியார் பஸ்கள் கூடுதல் கட்டண வசூலைத் தடுக்க வேண்டும்.
அமைச்சர் செந்தில்பாலாஜி:தி.மு.க., ஆட்சியில் கட்டாய ஹெல்மெட், மக்களின் உயிர் காப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. ஹெல்மெட் நிறுவனங்கள், உரிய முறையில் கவனித்ததால் கொண்டு வந்தனர். அதன்பின் காற்றில் பறக்க விட்டுவிட்டனர். மாணவர்கள் பயன்பாட்டிற்காக, முதல்வர் உத்தரவுப்படி மாணவர் சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. தனியார் பஸ்களில் கட்டணக் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்): அறிவித்தபடி திருவொற்றியூரிலிருந்து மெட்ரோ ரயில் விட வேண்டும். மோனோ ரயில், பஸ்களிலும், ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையில், ஒருங்கிணைந்த போக்குவரத்தை செயல்படுத்த வேண்டும். விபத்தில் சிக்கும் டிரைவரின் உரிமத்தை ரத்து செய்வது கடும் தண்டனை. வேறு தண்டனை வழங்க வேண்டும்; மறு பயிற்சிக்கு அனுப்பலாம். வழக்கில் சிக்கும் வாகனங்களை மீட்க வேண்டும்.
அமைச்சர் செந்தில்பாலாஜி: ஜப்தியில் சிக்கியிருந்த 338 பஸ்கள், மூன்று மாதத்தில், 10 கோடி ரூபாய் செலுத்தி மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 220 பஸ்களும் விரைவில் மீட்கப்படும்.
சவுந்தரராஜன்: ஆம்னி பஸ்கள் அதற்குரிய வகையில் செயல்பட வேண்டும்; ரெகுலர் சர்வீஸ் பஸ் போல செயல்பட்டு வருகின்றன. தி.மு.க., அரசு, வருமானம் ஈட்டும் 100 வழித்தடங்களை தனியாருக்கு விட்டுள்ளது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் போக்குவரத்து ஒப்பந்தங்களை செயல்படுத்தாததால், பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் 42 ஆயிரம் பேர் நியமித்தனர். தொழில்நுட்பட பணியாளர்களை நியமிக்கவில்லை.
அமைச்சர் செந்தில்பாலாஜி: வரம்பு மீறி செயல்படும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., ஆட்சியில், தேர்தலைக் கருத்தில் கொண்டு ஒப்பந்தம் போட்டு, அதை நிறைவேற்றாமல், ஊழியர்களை ஏமாற்றிவிட்டனர். இதை படிப்படியாக இந்த அரசு நிறைவேற்றும். கடந்த ஆட்சியில் கவனித்தவர்களுக்குத் தான் பணி நியமன உத்தரவு கிடைத்தது. தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்கவில்லை. கடந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.