பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்:சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்:சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை
ADDED : செப் 15, 2011 11:45 PM
ராமநாதபுரம்:பரமக்குடி கலவரத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம், கலெக்டர், நீதிபதி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கலவரத்தில், காயமடைந்தோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, விசாரித்து அறிக்கை வழங்கும்படி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதிகளுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், 17 பேரிடம் நேற்று விசாரணை நடந்தது.
கலெக்டர் சகாயம், முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) ராஜசேகரன், நேற்று காலை 10.30 மணிக்கு பாதிக்கப்பட்டோரை சந்தித்து, சிகிச்சை விவரங்களை குறிப்பெடுத்துக் கொண்டனர்.
கலெக்டர் அருண் ராய் கூறுகையில், 'மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி நோயாளிகளிடம் காயங்கள் மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்தோம். இதன் அறிக்கை, ஐகோர்ட்டில் இன்று சமர்ப்பிக்கப்படும்' என்றார்.* பரமக்குடி கலவரம்: டில்லி குழு ஆய்வு: டில்லியில் உள்ள தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய உறுப்பினர் லதா தலைமையிலான குழு, பரமக்குடியில் நடந்த கலவரப் பகுதிகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை நேற்று ஆய்வு மேற்கொண்டது.
* ராஜபாளையத்தில் அரசு பஸ் எரிப்பு: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேவர் சிலை அவமதிப்பை கண்டித்து, நேற்று முன்தினம் மறியல், பஸ் மீது கல் வீச்சு நடந்தன. திடீர் பதட்டத்தால் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
ராஜபாளையம் ஆவரம்பட்டி போக்குவரத்து டிப்போவில் இடப் பற்றாக்குறையால், ஆலங்குளம் செல்லும் டவுன் பஸ், நேற்றிரவு வெளியில் நிறுத்தப்பட்டிருந்தது.
நள்ளிரவில் அங்கு வந்த மர்மக் கும்பல், பஸ்சின் கடைசி சீட்டில் தீ வைத்து, கண்ணாடியை உடைத்து தப்பியது. மேலாளர் கார்த்திகேயன் புகார்படி, ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர் .'ராஜபாளையத்தில் தேவர் சிலை அவமதிப்பு தொடர்பாக, விசாரணை நடக்கிறது. குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம். இங்குள்ள 17 சிலைகளுக்கு, தலா இரு போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். பஸ் மீது கல் வீசினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என ராஜேஷ் தாஸ் ஐ.ஜி., கூறினார்.

