ADDED : செப் 17, 2011 11:28 PM
சென்னை: வங்கி இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்விற்கு, யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர் நலச் சங்கம், இலவச பயிற்சி அளிக்கிறது.
இந்தியன் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐ.ஓ.பி., உள்ளிட்ட 19 பொதுத் துறை வங்கிகள் ஒருங்கிணைந்து, ஐ.பி.பி.எஸ்., எனும் அமைப்பின் மூலம், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பொது எழுத்துத் தேர்வை, வரும் நவம்பர் 20ம் தேதி நடத்துகின்றன.
30 ஆயிரம் காலியிடங்களுக்காக, மாநில அளவில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பங்கேற்கும் பி.சி., பிரிவினருக்கு, யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர் சங்கம் சார்பில், சென்னையில் மூன்று நாள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. 'இப்பயிற்சியை பெற விரும்பும் பி.சி., பிரிவினர், வங்கி தேர்வுக்கு விண்ணப்பித்த படிவ நகலை, ஜாதிச் சான்றிதழுடன் இணைந்து, பொதுச் செயலர், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர் சங்கம், 139, பிராட்வே, சென்னை - 600 108 என்ற முகவரிக்கு, வரும் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இலவச பயிற்சிக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்' என, இச்சங்கத்தின் பொதுச் செயலர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு, 93810 07998, 94449 93844 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும் 24ம் தேதி கடைசி நாள்.