தேயிலை தோட்டப் பரப்பளவு சுருங்குது:வாரிய அதிகாரி வருத்தம்
தேயிலை தோட்டப் பரப்பளவு சுருங்குது:வாரிய அதிகாரி வருத்தம்
ADDED : செப் 18, 2011 11:57 PM
குன்னூர்:'நீலகிரியில், தேயிலை தோட்டங்களின் பரப்பளவு சுருங்கி வருகிறது; தோட்டங்களை ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்' என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்கத்தின் 58வது ஆண்டு விழா, நேற்று முன்தினம், குன்னூர் உபாசி அரங்கில் நடந்தது.
தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் பேசியதாவது:
இந்தியாவில் 40 லட்சம் விவசாயிகள் தேயிலை தொழிலை சார்ந்துள்ளனர். நிரந்தர வருமானம் தரும் தொழிலாக, தேயிலை விவசாயம் உள்ளது. புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றத்தால், புதிதாக தேயிலை சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, உற்பத்தி செலவு உட்பட பல சிக்கல்களை, தோட்ட தொழிலதிபர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
விவசாய நிலமாக உள்ள தேயிலை தோட்டங்களை, ரியல் எஸ்டேட் வணிகத்துக்கு பயன்படுத்தக் கூடாது; தேயிலை தோட்டங்களில், தேயிலை சாகுபடி மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.நீலகிரியில், தேயிலை தோட்டங்களின் பரப்பளவு சுருங்கி வருகிறது. 1998ல், கம்பெனி தேயிலை தோட்டங்களின் பரப்பளவு, 17 ஆயிரத்து 466 எக்டராக இருந்தது. தற்போது, 13 ஆயிரத்து 820 எக்டராக குறைந்துள்ளது. குன்னூர் தாலுகாவில், 1998ல், 4,522 எக்டராக இருந்த கம்பெனி தேயிலை தோட்டங்களின் பரப்பளவு, தற்போது 2,347 எக்டராக குறைந்துள்ளது. எனவே, தேயிலை சாகுபடியின் பரப்பளவை அதிகப்படுத்த வேண்டும்.
தேயிலை தொழிற்சாலைகளில் எரிபொருள் செலவு அதிகரிப்பதால், ஐ.நா., சபை உதவியுடன், எரிபொருள் சிக்கன நடைமுறை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தென்னிந்திய தேயிலை தொழிலதிபர்களுக்கு உதவும் வகையில், சிறப்பு தேயிலை மேம்பாட்டு நிதி அளிக்க, தேயிலை வாரியம் முன்வந்துள்ளது. உதவி பெற, கடந்த 7 ஆண்டுகளில் தங்கள் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் விவரங்களை, உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, தேயிலை வாரியத்துக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 50 சதவீத தேயிலை தொழிற்சாலைகள் மட்டுமே விண்ணப்பம் வழங்கியுள்ளன.இவ்வாறு, அம்பலவாணன் பேசினார்.