ADDED : அக் 07, 2011 09:32 PM
திருநெல்வேலி : நெல்லை அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில், கேரள மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், கூட்டத்தில் ஹவுஸ் என்ற ஊரைச் சேர்ந்த மனோஜ் மகள் மிதுலா,19. இவர், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 'எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்' பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியின் ஒரு அறையில், மேலும் இருமாணவிகளுடன் மிதுலா தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு மற்ற மாணவிகள் வெளியே சென்று விட்டனர். அப்போது அறையில் தனியாக இருந்த மிதுலா, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பெற்றோர், உறவினர்களுக்கு மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பினார்.
சிறிது நேரத்தில் மற்ற மாணவிகள், அறைக்கு திரும்பி வந்தபோது, மின்விசிறியில் மிதுலா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், சேரன்மகாதேவி தனியார் ஆஸ்பத்திரியிலும், பின்னர் நெல்லை ஹகிரவுண்ட் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பிரேத பரிசோதனைக்குப்பின், உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து, சேரன்மகாதேவி போலீசார் விசாரித்தனர்.

