ADDED : ஜூலை 28, 2011 12:55 AM
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில நாட்களாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில், நேற்று முன்தினம் மாலை முதல், விடிய விடிய மழை பெய்தது. நேற்றும் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. அதிகபட்சமாக, திருவள்ளூரில், 7 செ.மீ., மழை பதிவாகியது.
தமிழகத்தில், கடந்த, 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், ஆர்.கே.பேட்டை, காரைக்குடியில், 6, ஆரணி, வாலாஜாபேட்டை, குமாரபாளையம், சங்கரிதுர்கா, தோவாலையில், 5, கரம்பக்குடி, சோழிங்கர், திருப்பத்தூரில், 4, சென்னை விமான நிலையம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், பூண்டி, தாமரைப்பாக்கம், குடவாசல், நாகை, பரமணக்குடி, ஆம்பூர், குடியாத்தம், காவேரிபாக்கம், வாணியம்பாடி, வேலூர், திருச்செங்கோட்டையில், 3 செ.மீ., மழை பதிவாகியது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கடந்த, 24 மணி நேரத்தில், பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை நகரில், மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது'' என்றார்.

