தமிழகத்தில் மதுவிலக்கு அமல்: ம.தி.மு.க.,மாநாட்டில் தீர்மானம்
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்: ம.தி.மு.க.,மாநாட்டில் தீர்மானம்
ADDED : செப் 15, 2011 06:42 PM

திருநெல்வேலி:தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என நெல்லையில் நடந்த ம.தி.மு.க.,மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நெல்லையில் ம.தி.மு.க.,வின் திறந்தவெளி மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை வருமாறு: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க.,முடிவெடுத்துள்ளது. அதற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரளாவில் முல்லைப்பெரியாறு அணையை உடைத்துவிட்டுபுதிய அணை கட்ட முதல்வர் உம்மன்சாண்டி தலைமையிலான காங்.,அரசு முயற்சிக்கிறது. இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும். கூடங்குளம் அணுஉலையை மூடவலியுறுத்தி கிராமமக்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ம.தி.மு.க.,ஆதரவளிக்கிறது. அணுமின் நிலையத்தை மூட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கதமிழக அரசை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிழக்கு தைமூர், கொசாவோ, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா.,சபை ஏற்பாடு செய்துள்ளது. அதைப்போல இலங்கையிலும் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா.,வை உலகத்தமிழர்கள் வலியுறுத்த கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவை மீட்க தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. தி.மு.க.,வைப்போலவே அ.தி.மு.க.,வும் இலவசங்களை வாரி வழங்குவதற்காக ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் மதுவிற்பனையை ஊக்குவிக்கிறது. எனவே தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கைவிடப்பட்டது. கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை வேளாண்மை சார்ந்ததாக மாற்றியமைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அரசு கேபிள் டிவி திட்டத்திற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து சானல்களும் தெரியும்வண்ணம் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.

