ADDED : செப் 10, 2011 01:03 AM
திருப்பூர் :'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் இருந்து விலக்களிக்கக் கோரிய, சலவை ஆலைகளின் மனு, சென்னை ஐகோர்ட்டில் வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
திருப்பூர் பின்னலாடைத் தொழிலில், சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பில், எவ்வித வழிகாட்டுதலும் இல்லாததால், சுத்திகரிப்பு பிரச்னை வளர்ந்து விட்டது.
கோர்ட் நடவடிக்கை காரணமாக, சாயச் சலவை ஆலைகளின் கழிவு நீரை 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருப்பது போல், சலவை ஆலைக் கழிவுகளில் நச்சுத் தன்மை இல்லை. சலவை ஆலை கழிவு நீரானது, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கும், சவுக்கு மரங்களுக்கும் பாசன வசதிக்காகப் பயன்படுத்தப்பட்டது.'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்ட பிறகும் கூட, சலவை ஆலைகளும் ஏற்றுச் செயல்பட்டன. பல்வேறு தொழில்நுட்பம் காரணமாகவும், உற்பத்திச் செலவு அதிகரித்த காரணத்தாலும், சலவைத் தொழிலை, சாயத் தொழிலில் இருந்து பிரிக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும், ரசாயனப் பயன்பாடும் இல்லாததால், சலவை ஆலைகளுக்கு, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டு வருகிறது.சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டும், நீண்ட நாட்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. தமிழக அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, சலவை ஆலை உரிமையாளர்கள் சட்ட ரீதியாகச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சலவை ஆலை உரிமையாளர்கள் சங்கம் செய்திருந்த மனு மீதான விசாரணை, வரும் 16ம் தேதி நடக்கிறது.'ஆரஞ்சு' வகைப்பாட்டில் உள்ள சலவைத் தொழிலையும், 'சிவப்பு' வகைப்பாட்டில் இருக்கும் சாயத் தொழிலையும், தனித்தனியாக வகைப்படுத்துவது குறித்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கருத்துக் கேட்கப்படும். வாரியத்தின் பதிலுரையை ஏற்று, சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும் என, சலவை ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.