இரண்டாவது திருமணம் செய்ததாக "டிவி' நடிகர் மீது மனைவி புகார்
இரண்டாவது திருமணம் செய்ததாக "டிவி' நடிகர் மீது மனைவி புகார்
UPDATED : அக் 02, 2011 05:08 AM
ADDED : அக் 02, 2011 12:38 AM
சென்னை:அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாகவும், நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், 'டிவி' நடிகர் டிங்கு மீது, முதல் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் எந்நேரத்திலும் போலீசார் கைது செய்வார்கள் என்பதால், முன்ஜாமின் கேட்டு, முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், நடிகர் மனுதாக்கல் செய்துள்ளார்.சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரியா, 31. இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தபோது, கல்லூரிக்கு, கலாசார போட்டி நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த 'டிவி' நாடக நடிகர் டிங்கு என்றழைக்கப்படும் அருண்காந்த்துடன், 33, அறிமுகம் ஏற்பட்டது.
இருவரும் காதலித்து வந்த நிலையில், 2000ம் ஆண்டு சுப்ரியாவை, டிங்கு பதிவு திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்திற்கு, டிங்குவின் உறவினர்கள் வந்த நிலையில், சுப்ரியா தரப்பில் யாரும் வரவில்லை. 'அலைபாயுதே' பட பாணியில் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், 2004ல், சுப்ரியாவின் பதிவு திருமணம், அவரது பெற்றோருக்கு தெரிய வர, இருவருக்கும் அதே ஆண்டில் முறைப்படி திருமணம் நடந்தது.அப்போது, சுப்ரியாவிற்கு 100 சவரன் நகைகள், 30 லட்சம் மதிப்பிலான வைர நகைகள், பல கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை தட்சணையாக கொடுத்தனர். டிங்குவும், சுப்ரியாவும் சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, லக்சனா, 5, என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கூடுதல் வரதட்சணையாக கார் வேண்டும் என, டிங்கு கேட்டுள்ளார். அதுவும் வாங்கி தரப்பட்ட நிலையில், டிங்குவின் நடவடிக்கைகளில், தவறான மாற்றங்கள் சுப்ரியாவிற்கு தெரிந்தது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை வந்துள்ளது. மேலும், 'டிவி' சீரியல் தயாரிக்க டிங்கு, 20 லட்சம் ரூபாய் கேட்டதால், சுப்ரியா மனமுடைந்தார். கேட்ட பணத்தை தர முடியாததால், கடந்தாண்டு ஜூலை மாதம், முகப்பேரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சுப்ரியா சென்று விட்டார்.
இதற்கிடையே, மனைவிக்கு தெரியாமல் 'டிவி' நாடக நடிகை ஒருவரை, டிங்கு திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது. இதைப்பற்றி இப்போது தகவலறிந்த சுப்ரியா, அண்ணா நகர் துணைக்கமிஷனர் பிரேமானந்த் சிங்காவிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவை அடுத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கைதாவாரா?
இந்த விவகாரத்தில், போலீசார் எந்நேரத்திலும் கைது செய்வார்கள் என்பதால், முன்ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். 'வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக எனக்கு எதிராக, என் மனைவி சுப்ரியா புகார் கொடுத்துள்ளார். வேறொரு பெண்ணை திருமணம் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். எனக்கும், சுப்ரியாவுக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. எங்களுக்கு, ஐந்து வயதில் மகள் உள்ளார். நாங்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்தோம். மகள் பிறந்த பின், என்னிடம் சுப்ரியா தகராறு செய்தார்.
'கடந்த 28ம் தேதி என் வீட்டுக்கு, போலீசார் எனக் கூறிக்கொண்டு சிலர் வந்தனர். அவர்களுடன் வருமாறு அழைத்தனர். அடையாள அட்டையை காட்டுமாறு அவர்களிடம் கூறினேன். அவர்கள் திரும்பி வருவதாக கூறிச் சென்றனர். என்னை இந்த வழக்கில் கைது செய்யக்கூடும். எனவே, முன்ஜாமின் வழங்க வேண்டும்' என கோரியுள்ளார்.
இம்மனு, நீதிபதி தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் வழங்கக் கூடாது என, சுப்ரியா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை 20ம் தேதிக்கு நீதிபதி தேவதாஸ் தள்ளி வைத்தார். அருண்காந்த், சுப்ரியா இருவரும் 19ம் தேதி கவுன்சிலிங் முன் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

