கோடியக்கரை தமிழர் வீட்டில் ரூ.80 லட்சம் போதை:15 ஆண்டுகளுக்கு பின் கடத்தல் அதிகரிப்பு
கோடியக்கரை தமிழர் வீட்டில் ரூ.80 லட்சம் போதை:15 ஆண்டுகளுக்கு பின் கடத்தல் அதிகரிப்பு
UPDATED : நவ 13, 2011 11:01 PM
ADDED : நவ 13, 2011 10:07 PM

வேதாரண்யம்:கோடியக்கரையில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் வீட்டிலிருந்து, 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
கூடங்குளம் பிரச்னையால், கடத்தல்காரர்களின் பார்வை கோடியக்கரை பக்கம் திரும்பியுள்ளது. இதனால், 15 ஆண்டுகளுக்கு பின், கோடியக்கரை கடல் பகுதி மீண்டும் கடத்தல் தளமாகியுள்ளது.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் பிரச்னையைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வேதை, கோடியக்கரை கடற்பகுதிகளில், கடத்தல் சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன.
கடந்த 1978ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டு வரை, கடத்தல்காரர்களின் சொர்க்க பூமியாக நாகை மாவட்டம், கோடியக்கரை விளங்கியது. இலங்கையில் உள்ள காங்டூகேர் துறைமுகத்துக்கும், கோடியக்கரைக்கும், 15 கடல் மைல் தொலைவு தான். அதிவேக படகில், 30 நிமிடங்களில் இந்த தூரத்தை கடக்க முடியும். எனவே தான், இந்தியா - இலங்கை கடத்தல்காரர்களுக்கு, இந்த இடம் மிகவும் வசதியாக இருந்து வந்தது.
இந்தியாவிலிருந்து ஜவுளி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான வெடிமருந்து பொருட்கள் இலங்கைக்கு முன்னர் கடத்தப்பட்டன. அதேபோல், இலங்கையிலிருந்து தங்கம், வெள்ளி மற்றும் கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தப்பட்டன. கஸ்டம்ஸ் அதிகாரிகள், போலீசார் இப்பகுதியில் தீவிரமாக கண்காணிக்கத் துவங்கினர்.
ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் கடத்தல் புள்ளி கோடியக்கரையைச் சேர்ந்த சண்முகம் என்பவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்காக வேதாரண்யத்துக்கு அழைத்து வந்தபோது, 1991ல் வேதாரண்யம் பயணியர் மாளிகையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.
இதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேதை, கோடியக்கரை பகுதியில், 36 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கடத்தல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இப்பகுதியில், 15 ஆண்டாக ஓய்ந்திருந்த கடத்தல் மீண்டும் துவங்கியுள்ளது.கடந்த 11ம் தேதி, கோடியக்கரை காட்டிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட, 4.5 கோடி ரூபாய் மதிப்புடைய, 15.6 கிலோ தங்கக் கட்டிகளை, நாகப்பட்டினம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இது தொடர்பாக ராஜிவ் கொலை வழக்கில் சிக்கி, மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சண்முகம் மகன் ஆனந்தன், 26, டிரைவர் வேதையன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், நேற்று காலை, தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில், 80 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருளை போலீசார் கைப்பற்றியது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1989ம் ஆண்டு அகதியாக வந்த இலங்கையைச் சேர்ந்த திவ்யநாதன் மகன் ஆல்பர்ட், 36, தேத்தாக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரி அமுதாவை திருமணம் செய்து கொண்டார்.
இவரது வீட்டில் போதைப் பொருள் இருப்பதாக, வேதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வேதாரண்யம் டி.எஸ்.பி., குணசேகரன், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், தனிப்படை போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டு பரண் மீது, 885 கிராம் ஹெராயின் போதைப் பொருளை கைப்பற்றினர்.
இதன் சர்வதேச மதிப்பு 80 லட்சம் ரூபாய். அந்த பை மீது, 'ஆப்கானிஸ்தான் 2005-2010' என்று எழுதப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆல்பர்டிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

