ADDED : ஆக 23, 2011 04:59 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோவிலில் கண்காணிப்பிற்காக, பல லட்ச ரூபாய் மதிப்பில், நவீன நைட்விஷன் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில், மூன்றாம் பிரகாரம், அனுப்பு மண்டபம், பிரதான நுழைவு வாயில்கள், சுவாமி அம்பாள் சன்னிதி மற்றும் கருவறையின் முன்புறம், பிரகாரத்தின் மேல்தளம் உள்ளிட்ட பகுதியில், இரவிலும், நன்கு தெரியக் கூடிய தானியங்கி நைட்விஷன் கேமரா மற்றும் சுழலும் வகையில், 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, கோவில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் கூறியதாவது:ஏற்கனவே, கோவிலில் செயல்படாமல் இருந்த கேமராக்கள், சேதமடைந்த கேபிள்கள் அகற்றப்பட்டு, தற்போது, 16 புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப, கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 24 மணி நேரமும், கோவிலின் அன்றாட நடவடிக்கைகள் பதிவாகும். வெளியூர் சென்றாலும், அன்றாட நடவடிக்கைகளை, கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்திலிருந்து இங்குள்ள கேமராவில் பதிவாகும் காட்சிகளை பார்வையிடலாம்.இவ்வாறு ராஜமாணிக்கம் கூறினார்.