ADDED : அக் 08, 2011 10:47 PM
சென்னை:உள்ளாட்சித் தேர்தலுக்காக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழக தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கை:கடந்த சட்டசபை தேர்தலுக்கு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான கூடுதல் தகவல்களுடன், வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், வாக்காளர் வசிக்கும் வார்டு எண், தெரு பெயர், கதவு எண், வாக்காளர் புகைப்படம் ஆகியன இடம் பெற்றுள்ளன.தமிழக தேர்தல் கமிஷனின்www.tnsec.tn.nic.in இணையதளத்தில், உங்கள் ஓட்டுச் சாவடியை அறிய என்ற தலைப்பில், வாக்காளரின் வார்டு மற்றும் ஓட்டுச் சாவடி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்தால், வாக்காளரின் பெயர், பாலினம், தந்தை பெயர், வார்டு எண், பாகம் எண், ஓட்டளிக்க வேண்டிய ஓட்டுச் சாவடியின் பெயர் ஆகிய விவரங்களை அறியலாம்.தேசிய தகவல் மைய ஒருங்கிணைப்புடன், உள்ளாட்சி தேர்தலுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

