
பிப்ரவரி 13, 1879
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில், விஞ்ஞானி அகோரநாத் சட்டோபாத்யாயா - கவிதாயினி வரதா சுந்தரியின் மகளாக, 1879ல் இதே நாளில் பிறந்தவர், சரோஜினி சட்டோபாத்யாயா.இவர் தன் 12வது வயதில், மெட்ரிகுலேஷன் தேர்வில் சென்னை மாகாணத்தின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். தன் 16வது வயதில், நிஜாம் அறக்கட்டளை உதவித்தொகையுடன், லண்டனின் கிங்க்ஸ் கல்லுாரி, கேம்ப்ரிட்ஜ் கிர்டன் கல்லுாரிகளில் படித்தார். லண்டனில் படித்த போது, முத்யாலா கோவிந்தராஜுலு நாயுடு என்ற டாக்டரை காதலித்து மணந்தார்.
நாடு முழுதும் சுற்றி, சமூக பிரச்னைகளை அறிந்தார். நேருவுடன் இணைந்து, 'சம்பரண் இண்டிகோ' போராட்டத்தில் ஈடுபட்டார். 1925ல், காங்கிரசின் முதல் பெண் தலைவராக தேர்வானார்.ஒத்துழையாமை, வெள்ளையனே வெளியேறு இயக்கங்களில் போராடி சிறை சென்றார். சுதந்திரத்துக்கு பின், உத்தர பிரதேசத்தின் கவர்னரானார். பல கவிதை நுால்களை எழுதிய இவர், 1949, மார்ச் 2ல், தன், 70வது வயதில் மறைந்தார்.
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் பிறந்த தினம் இன்று!