வில்லங்க சொத்துக்களை பதிவு செய்ய அனுமதிப்பதா? அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
வில்லங்க சொத்துக்களை பதிவு செய்ய அனுமதிப்பதா? அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
ADDED : செப் 12, 2024 02:49 AM
சென்னை:வில்லங்க சொத்துக்களை பதிவு செய்ய அனுமதித்து, சொத்துக்களை அபகரிக்க தமிழக அரசே துணை போவதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும்,நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என, சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
பதிவுத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, சர்ச்சைக்குரிய, நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளை பதிவு செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.இச்சூழலில் பத்திரப் பதிவுகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும்செய்யப்பட வேண்டும்.
வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பதிவுத்துறை செயல்படக் கூடாது.
வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய அனுமதித்தால்,அது சொத்துக்களை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும்.அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத் துறையும் துணை போகக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.