ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு ஏற்பாடு 9 மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கலக்கம்
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு ஏற்பாடு 9 மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கலக்கம்
ADDED : செப் 07, 2024 07:03 PM
சென்னை:உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருவது, புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்வானவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்டே்டை, திருநெல்வேலி, தென்காசி உட்பட ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, பிற, 29 மாவட்டங்களில் உள்ள, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு, 2019ல் தேர்தல் நடத்தப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், வார்டு வரையறை செய்யப்பட்டு, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2022ல் தேர்தல் நடந்தது.
கடந்த 2019ல் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம், வரும் டிசம்பரில் நிறைவடைகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில், தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2026ல் நிறைவடைகிறது.
இந்த சூழ்நிலையில், மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை துவக்கி உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, ஓட்டுப் பெட்டிகளை பழுது பார்த்து சுத்தம் செய்து, தயார் நிலையில் வைக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தேர்தல் ஆணைய செயலர் பாலசுப்ரமணியம், சென்னை தவிர்த்து மீதமுள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள கடிதம்:
ஊரக உளளாட்சி அமைப்புகள், தேர்தலுக்கு தேவையான அனைத்து ஓட்டுப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். ஓட்டுப் பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து, நல்ல நிலையில் உள்ளவை, சிறிதாக பழுதடைந்து சீர் செய்யக் கூடியவை, பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளவை என, தரம் பிரிக்க ணேவ்டும்.
ஓட்டுப் பெட்டிகளின் சிறிய பழுதை சரி செய்யும் பணிக்கு, தலா 25 ரூபாய் அனுமதிக்கப்படுகிறது. ஓட்டுப் பெட்டிகளை தயார் செய்து, வர்ணம் பூசி, சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு ஆணையம் தயாராகி வரும் நிலையில், 2019ல் தேர்தல் நடந்த பதவிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் நடத்தப்படுமா அல்லது 2021ல் தேர்தல் நடத்தப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுமா என்பது தெரியவில்லை.
இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், தங்கள் பதவியை கலைத்து, தேர்தல் நடத்த அரசு ஏற்பாடு செய்து விடுமோ என, புதிய ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி எல்லைகளை மாற்றி அமைக்க, அரசு முடிவு செய்திருப்பதால், தேர்தல் நடத்துவது தாமதமாகும் என, ஒரு தரப்பினர் கூறும் நிலையில், அரசு உறுதியாக எந்த முடிவையும் அறிவிக்காமல் இருப்பதால், பதவிக்காலம் முடியாத மக்கள் பிரதிநிதிகள் கலக்கத்திலேயே உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்குமா என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.