சட்டசபை உரிமை குழுவிடம் முதல்வர் விளக்கம் அளிக்க உத்தரவு
சட்டசபை உரிமை குழுவிடம் முதல்வர் விளக்கம் அளிக்க உத்தரவு
ADDED : ஜூலை 31, 2024 07:48 PM
சென்னை:சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், 2017ல் உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ல், அ.தி.மு.க., ஆட்சியின்போது, சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்றதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, உரிமை மீறல் நோட்டீசை, உரிமைக் குழு அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நோட்டீசை ரத்து செய்தது.
இதை எதிர்த்து, சட்டசபைச்செயலர் மற்றும் உரிமைக் குழு சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
எல்லா சூழ்நிலையிலும், சட்டசபையின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும்; சபையின் செயல்பாடு சீராக நடக்க வேண்டும் என்பதற்காக தான், விதிகள் மற்றும் சிறப்புரிமைகள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபை விதிகளின் கீழ், உரிய நடைமுறையை பின்பற்றி, இவ்விவகாரத்தில் முடிவை எட்டியிருக்க வேண்டும்.
உரிமை மீறல் நோட்டீஸ் ரத்துக்கு, தனி நீதிபதி குறிப்பிட்டிருக்கும் காரணம் ஏற்புடையதல்ல. ஒவ்வொரு சட்டசபையும் கலைக்கப்பட்ட பின், இதுபோன்ற உரிமை மீறல் பிரச்னைகளை கைவிட்டு விட முடியாது.
சட்டசபையும், அதன் கீழ் அமைக்கப்பட்ட உரிமைக் குழுவும், மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சபை நலன் கருதி, அதில் எழும் உரிமை மீறல் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அக்குழுவால் வெளியிடப்பட்ட அறிவிப்பு என்பது, சபையின் ஒழுங்கு சார்ந்த விவகாரங்கள் தொடர்புடையது.
எதிர்க்கட்சி, ஆளும்கட்சியாக மாறியது என்ற காரணத்துக்காக மட்டும், அந்த நடவடிக்கைகள் காலாவதியாகாது. எனவே, முதல்வர் உள்ளிட்டோர் நோட்டீசுக்கு, உரிமைக் குழுவிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.
சட்டசபைச் செயலர், சபாநாயகர், சட்டசபையின் உரிமைக்கு குழு, இவ்விவகாரத்தில் சபை விதிகளின்படி உரிய நடைமுறையைப் பின்பற்றி, நோட்டீசுக்கு விளக்கம் பெற்று, இறுதி முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து, 2021ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***