அக்., 7ல் தனுஷ், ஐஸ்வர்யா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
அக்., 7ல் தனுஷ், ஐஸ்வர்யா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 16, 2024 04:44 AM

சென்னை : பரஸ்பரம் விவாகரத்து கோரிய நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர், அக்., 7ல் ஆஜராக, சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினி மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவை, 2004ல் நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் மனமொத்து பிரிவதாக, 2022 ஜனவரியில் அறிவித்தனர்.
பிரிவு தொடர்பாக, சமூக வலைதளத்தில் இருவரும் தனித்தனியாக வெளியிட்ட அறிவிப்பில், '18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம், வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று கூறியிருந்தனர்.
தனுஷ், ஐஸ்வர்யா இடையே உள்ள பிரச்னையை தீர்க்க, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டனர். இருப்பினும், விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரி, கடந்த 6ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அக்., 7ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

