மாவட்டங்களில் 'மெமு' ரயில் சேவையை அதிகரிக்க கோரிக்கை
மாவட்டங்களில் 'மெமு' ரயில் சேவையை அதிகரிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 29, 2024 07:11 PM
சென்னை:மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும், 'மெமு' ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தெற்கு ரயில்வேயில், காட்பாடி - அரக்கோணம்; சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், திருத்தணி - சென்ட்ரல், பித்ரகுண்டா - சென்ட்ரல் உட்பட பல்வேறு தடங்களில், 12க்கும் மேற்பட்ட 'மெமு' எனப்படும், குறுகிய துார பயணியர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வகை ரயில்களில் ஒன்பது பெட்டிகள் இணைக்கப்படும்.
தற்போது, தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், மெமு ரயில்களை அதிகரித்து இயக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:
மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து வசதியை இணைக்கும் வகையில், சில வழித்தடங்களில், 'மெமு' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால், ரயில் போக்குவரத்தின் தேவை அதிகரித்து வருகிறது.
எனவே, விழுப்புரம் - தாம்பரம், தாம்பரம் - புதுச்சேரி, தாம்பரம் - திருவள்ளூர், அரக்கோணம் - செங்கல்பட்டு, திருச்சி - விழுப்புரம், திருவண்ணாமலை - தாம்பரம், வேலுார் - சேலம், காட்பாடி - அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் பயணியரின் தேவைக்கு ஏற்ப, குறுகிய துார பயணியர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “தெற்கு ரயில்வேயில் தற்போதுள்ள, 12 மெமு வகை ரயில்களில், 12 பெட்டிகளை இணைத்து இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
''அதுபோல, பயணியரின் கோரிக்கை மனுவை பரீசிலித்து, நெரிசல் மிக்க வழித்தடங்களில், மெமு ரயில் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர்.

