ADDED : ஆக 07, 2024 01:00 AM
சென்னை:'முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பள்ளி மாணவர்களின் வயது வரம்பு பிரிவை மாற்றி அமைக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இந்தாண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பதிவை, அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்திருக்கிறார். அதில், பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பை, 12 முதல் 19 வயது வரை ஒரே பிரிவில் வைத்திருக்கின்றனர். இது, தேசிய விளையாட்டு கூட்டமைப்பு வகுத்துள்ள வயது வரம்பு பிரிவுகளான, 11 - 14 வயது, 14 - 17 வயது, 17 - 19 வயது என்பதற்கு முற்றிலும் எதிரானது.
இது மட்டுமின்றி, 12 வயது பள்ளி சிறுவனை, 19 வயது சிறுவனோடு ஒரே பிரிவில் போட்டியிட வேண்டும் என்று வைத்திருப்பது முட்டாள்தனம். இதனால், சம வயதினர்களோடு போட்டியிடும் சம வாய்ப்பு இன்றி இளம் சிறுவர்கள் ஏமாற்றம் அடைவர். இளம் வயதிலேயே மனதளவில் தளரவும் வாய்ப்புள்ளது. விளையாட்டு துறையில் அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.
செலவை குறைக்கிறோம் என்ற பெயரில், விளையாட்டு துறையின் நோக்கத்தையே சீர்குலைத்துள்ளனரா என்ற சந்தேகமும் எழுகிறது. உடனே, 12 - 19 வயது வரை ஒரே பிரிவு என்ற அறிவிப்பை மாற்றி அமைக்க வேண்டும். விளையாட்டு துறையில் சாதிக்கும் திறமையும் ஆர்வமும் உடைய பள்ளி மாணவர்கள் கனவை சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் சிதைத்து விட வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.