கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் தேர்தல் பார்வையாளர்களுக்கு உத்தரவு
கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் தேர்தல் பார்வையாளர்களுக்கு உத்தரவு
ADDED : ஏப் 14, 2024 03:13 AM

சென்னை : 'தேர்தல் பார்வையாளர்கள் அனைவரும், பணப் பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்' என, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் அறிவுறுத்தி உள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி, அனைத்து தொகுதிகளிலும், தேர்தல் பொதுப்பார்வையாளர், செலவின பார்வையாளர், காவல்துறை பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அனுமதிக்கக் கூடாது
தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நாடு முழுதும், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, சிறப்பு தேர்தல் பார்வையாளர் பாலகிருஷ்ணன், கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் சங்கர்லால் குமாவத், இணை தலைமை தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டம் முடியும் வரை, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தவிர, அந்த அறைக்குள் வேறு யாரும் அனுமதிக்கப்படக்கூடாது. குடிநீர், தேநீர் கொண்டு வரக்கூட யாரையும் அனுமதிக்கக் கூடாது என, தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்திருந்தது.
தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். தேர்தல் கமிஷனர்கள் கயனேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறிவுரை
கூட்டத்தில், தலைமை தேர்தல் கமிஷனர் பேசும்போது, முதல் கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. அப்பகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்.
பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு ஆகியவற்றை வைத்து, சோதனையை தீவிரப்படுத்துங்கள். உங்கள் மொபைல் எண்ணை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். யார் போனில் தொடர்பு கொண்டாலும் பேசுங்கள்.
அவர்கள் கூறும் புகார்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுங்கள். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க வேண்டும் என, தலைமை தேர்தல் கமிஷனர் அறிவுரை வழங்கி உள்ளார்.

