மின்சார வாகன 'சார்ஜிங்' மையங்கள்: மொபைல் செயலியில் அறிய வசதி
மின்சார வாகன 'சார்ஜிங்' மையங்கள்: மொபைல் செயலியில் அறிய வசதி
ADDED : மே 05, 2024 12:52 AM

சென்னை: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு அளிக்கப்படும் சலுகை, 'சார்ஜிங்' மையம் இருக்கும் இடங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் இணையதளம், மொபைல் போன் செயலியில் அறியும் வசதியை, தமிழக அரசு அடுத்த மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுதும், சுற்றுச்சூழலை பாதிக்காத, மின்சாரத்தில் இயங்கும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
மின்சார வாகனங்களை சார்ஜிங் செய்ய, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள், சில பெட்ரோல் பங்க்குகள் போன்றவற்றில், 'சார்ஜிங்' மையங்கள் உள்ளன. அவை, எங்கு உள்ளன என்ற விபரம் பலருக்கு தெரிவதில்லை.
எனவே, சார்ஜிங் மையம் உள்ள இடங்கள், மின்சார வாகனங்கள் வாங்க மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் சலுகைகள், எந்தெந்த நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்கின்றன.
டீலர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் ஒரே தளத்தில் தெரிந்து கொள்ள வசதியாக, மின்சார வாகன இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியை, அரசு அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நம் நாட்டில், மின்சார வாகனங்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மின்சார வாகனங்களை பயன்படுத்தும் பலர், 'சார்ஜிங்' மையம் இருக்குமா என்ற அச்சம் காரணமாக, வெளியூர்களுக்கு ஓட்டி செல்ல தயங்குகின்றனர். இதற்காகவே, மின்சார வாகனத்திற்கென தனி மொபைல் செயலி, இணையதளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதில், வீட்டில் இருந்து எங்கு செல்கின்றனரோ, அந்த இடங்களில் உள்ள சார்ஜிங் மையங்கள், மின்சார வாகனத்தின் பயன் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.