பாரத எதிர்ப்பு சக்திகள் கூட்டணி விழிப்புடன் இருக்க கவர்னர் அறிவுரை
பாரத எதிர்ப்பு சக்திகள் கூட்டணி விழிப்புடன் இருக்க கவர்னர் அறிவுரை
ADDED : ஆக 15, 2024 12:42 AM
சென்னை:'பாரத எதிர்ப்பு சக்திகள் கூட்டணியின் தீய வடிவங்களுக்கு எதிராக, நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்' என, கவர்னர் ரவி தெரிவித்து உள்ளார்.
சுதந்திர தின வாழ்த்து செய்தியில், அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக, பிரதமர் மோடி தலைமையின் கீழ், பாரதம் விளிம்பிலிருந்து, உலக விவகாரங்களின் மைய நிலைக்கு நகர்ந்துள்ளது.
நாடு விரிவான புரட்சிகர மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் முன்னேற்ற பயணத்தில், நம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும்.
தமிழகம், பாரதத்தின் அறிவுசார் மற்றும் ஆன்மிக தலைநகரமாக திகழ்கிறது. எனினும், பள்ளிகள், கோவில்கள், கிராம திருவிழாக்கள் போன்றவற்றில், தலித்துகளுக்கு எதிரான சமூக பாகுபாடுகள் குறித்து அடிக்கடி வரும் செய்திகள் வேதனைக்குரியவை.
இந்த பாரபட்சமான நடைமுறைகளை புறந்தள்ளி, அவர்களை இரு கரங்களுடன் ஆரத்தழுவ வேண்டும். இந்த விஷயத்தை இளைஞர்கள் முன்னின்று வழிநடத்த வேண்டும். தீண்டாமை என்ற அவமானகர கறையை தாமதமின்றி அகற்ற வேண்டும்.
நம் சமூகத்தில், குறிப்பாக இளைஞர்கள் இடையே அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் பரவலால் கவலை அடைந்துள்ளோம். பள்ளிகள், கல்லுாரிகள் அருகே, போதைப் பொருள் எளிதாக கிடைப்பதாக, கவலை அளிக்கும் தகவல்கள் உள்ளன. இவை மிக அபாயகரமானவை.
போதையில் இருந்து நம் இளைஞர்களை நாம் காப்பாற்ற வேண்டும். போதைக்கு எதிராக, எப்போதும் விழிப்புடன் இருப்பது, நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாராயம் அருந்தியதால், விலை மதிப்பற்ற பல உயிர்களை இழந்துள்ளோம். இது ஒப்பீட்டளவில் அதிக பேரிழப்பை ஏற்படுத்தியது.
இதற்கு காரணமான மரண வியாபாரிகள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்காமல் இருக்கவும், அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படுவதையும் காவல் துறை உறுதிப்படுத்தும் அதே வேளையில், நம் சட்ட அமலாக்க அமைப்புகளும், பொது மக்களும், கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும்.
நம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும், பொருளாதாரத்தை நசுக்கவும், கணிசமான அளவில், வெளிநாட்டு நிதி ரகசியமாக பயன்படுத்தப்படுகிறது. தொடர்ச்சியான பொய் பிரசாரங்கள் வழியே, நம் அமைப்புகள் மீது, பொதுமக்கள் நம்பிக்கையை குலைக்க முயல்கின்றன.
உலக அளவில் நேர்மைக்காக மதிக்கப்படும் நம் நீதித் துறை, தேர்தல் கமிஷன் துாற்றுதலுக்கு ஆளாக்கப்படுகின்றன.
அந்த விரோத சக்திகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வழியே, போலி உருவக காட்சிகள் மற்றும் போலிக் கதைகளை விதைக்கின்றன.
சமூக பதற்றத்தை துாண்டி, அராஜகத்தை உருவாக்க முயல்கின்றன. அத்தகைய பாரத எதிர்ப்பு சக்திகள் கூட்டணியின் தீய வடிவங்களுக்கு எதிராக, நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.