'நிதியமைச்சர் செய்தது தவறென்றால் அமைச்சர் மகேஷ் செய்தது சரியா?'
'நிதியமைச்சர் செய்தது தவறென்றால் அமைச்சர் மகேஷ் செய்தது சரியா?'
ADDED : செப் 14, 2024 09:02 PM
சென்னை:சென்னை, கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், முப்பெரும் விழா நடந்தது. அதில் பங்கேற்ற, கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அளித்த பேட்டி:
முதல்வரின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளது. அவர் சிகிச்சைக்காகத்தான், அமெரிக்கா சென்றார் என்பதே எதிர்க்கட்சிகளின் கருத்து. அவர் அமெரிக்க பயணம் வாயிலாக ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஜி.எஸ்.டி., ஆலோசனை கூட்டத்தில், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர், வியாபாரிகள மற்றும் பொதுமக்களுக்கான பாதிப்பை தான் நிதி அமைச்சரிடம் எடுத்துரைத்தார். அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. ஊடகங்களில் இந்த விஷயம் பெரிதானதும், நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கோரி உள்ளார். இது சாதாரண விஷயம். இதை தி.மு.க.,வும் காங்.,கும் ஏன் பெரிதாக்குகிறது என புரியவில்லை.
சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விஷயமும் அப்படித்தான். தேவையே இல்லாமல் அது பூதாகரமாக்கப்பட்டது. அவரை, அரசு பள்ளியில் பேசச் சொல்லி அழைத்துச் சென்றது யார் என்ற கேள்விக்கு இதுவரை யாரிடம் இருந்தும் பதில் இல்லை.
மகாவிஷ்ணு குறித்து பேசிய அமைச்சர் மகேஷ், 'என் ஏரியாவுக்கு வந்து பேசியிருக்கிறாய். என்ன செய்கிறேன் பார்' என கூறியுள்ளார். அதை யாரும் கண்டிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை.
மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளரை மத்திய நிதியமைச்சர் மிரட்டியதாக தி.மு.க., கூறுகிறது. அப்படியென்றால் மகேஷ் மட்டும் மகாவிஷ்ணுவை மிரட்டலாமா? மது ஒழிப்பு மாநாடு யார் நடத்தினாலும், வரவேற்போம். அடுத்தடுத்து வரவிருக்கும் தேர்தலுக்கான பணிகள் துவக்கி விட்டோம். வரும் ஆண்டு மார்ச்சில், ராஜ்யசபா வேட்பாளரை அறிவிப்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.