ADDED : ஏப் 24, 2024 12:23 AM
சென்னை:தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பலரும், 'ஏசி' சாதனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அதன் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த ஒன்றரை மாதங்களாக, வெயில் எப்போதும் இல்லாத வகையில் சுட்டெரித்து வருகிறது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வீடுகளுக்கு அருகில் இடைவெளி மிகவும் குறைவு.
இதனால், வெயிலால் ஏற்படும் அனல் காற்றால் வீடுகளில் புழுக்கத்தில் சிக்கி, பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, வெயிலின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலரும் தங்களின் வசதிக்கு ஏற்ப, மின்விசிறி, 'ஏசி, ஏர்கூலர்' ஆகிய சாதனங்களை வாங்கி வருகின்றனர்.
குறிப்பாக, 'ஏசி' விற்பனை மிகவும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, முன்னணி எலக்ட்ரானிக்ஸ் ேஷாரூம் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒவ்வொரு மாவட்டத்திலும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்கும் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ேஷாரூம்கள், 200 வரை உள்ளன. ஒரு ேஷாரூமில் மாதத்திற்கு சராசரியாக, 100 'ஏசி' சாதனங்கள் விற்பனையாகும்.
மார்ச் இறுதியில் இருந்து ஒரு ேஷாரூமில் வாரத்திற்கு, 100 - 150 'ஏசி' சாதனங்கள் விற்பனையாகின்றன. தற்போது, 'ஏசி' வாங்கும் 10 நபரில் ஒருவர், முதல் முறையாக வாங்குகிறார்; மற்ற நபர்களிடம் ஏற்கனவே ஒரு 'ஏசி' உள்ள நிலையில் கூடுதலாக வாங்குகின்றனர்.
வாடகை வீடுதாரர் மற்றும் குறைந்த சதுர அடியில் வீடு இருப்பவர்கள், ஒரு டன் திறனிலும், சொந்த வீடு வைத்திருப்பவர்கள், 1.50 டன் திறன் 'ஏசி' சாதனங்களையும் வாங்குகின்றனர். பலரும் மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்தும், '3 ஸ்டார், 5 ஸ்டார்' ஏசி சாதனங்களை ஆர்வமுடன் கேட்டு வாங்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

