சுங்கச்சாவடிகளை அகற்றும் ம.ம.க., போராட்டம் தொடரும் எம்.எல்.ஏ., அப்துல்சமது சூளுறை
சுங்கச்சாவடிகளை அகற்றும் ம.ம.க., போராட்டம் தொடரும் எம்.எல்.ஏ., அப்துல்சமது சூளுறை
ADDED : செப் 17, 2024 10:26 PM

சென்னை:''உரிய காலக்கெடுவுக்குள் செயல்படும் சுங்கசாவடி கட்டண உயர்வை கண்டித்தும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவதை வலியுறுத்தியில் தொடர்ந்து போராட தீர்மானித்துள்ளோம். இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் வரை ஓய மாட்டோம்; போராட்டத்தைத் தொடருவோம்,'' என, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலரும், எம்.எல்.ஏ.,வுமான அப்துல்சமது கூறினார்.
அவர், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:
நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில், 67 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இது போதாதென்று விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் மேலும் மூன்று சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில், மேலும், 10 சுங்கச்சாவடிகளை அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்கின்றனர்.
நம் அண்டை மாநிலமான கேரளா முழுதும் ஐந்து சுங்ச்சாவடிகள் தான் செயல்டுகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வகுத்துள்ள நெறிமுறைகளை பார்த்தால், தமிழகத்தில் ஒன்பது சுங்கச்சாவடிகளை மட்டும் தான் இருக்க வேண்டும்.
விதிகளை மீறி சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில், ஆண்டுக்கு இரண்டு முறை, 5 -7 சதவீதம் கட்டண உயர்வு செய்வது பகல் கொள்ளை. மக்களை ரத்தத்தை உறிஞ்சி, இத்தையக பகல் கொள்ளையில் மத்திய அரசு, இரக்கமின்றி ஈடுபடுகிறது.
தற்போது செயல்பட்டுக் கொண்டிருப்பதில் 30 சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டன. இதையெல்லாம் நீக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு தெரிவித்திருக்கிறார். ஆனால், பல மாதங்கள் கடந்த பின்பும், அதன்மீது மத்திய அரசு தரப்பில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காலாவதியான சுங்கச்சாவடிகளில் தொடச்சியாக சுங்கக் கட்டணம் வசூலிப்பது அடாவடியான செயல்.
இதை கண்டித்து, எங்கள் கட்சி சார்பில், திருச்சி மாவட்டம் துவாக்குடியில் என் தலைமையில் நேற்று முன்தினம் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட்டது.
அதேபோல, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, மதுரை மாவட்டம் கப்பலுார், வேலுார் பள்ளிகொண்டான், செங்கல்பட்டு மாவட்டம் பரனுார், கோவை கருமத்தம்பட்டி, திருநெல்வேலி நாங்குநேரி ஆகிய ஏழு சுங்கச்சாவடிகளை அகற்றும் போராட்டமும் நடத்தப்பட்டது. இதில், பரனுார், துவாக்குடி, பள்ளி கொண்டானில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக எங்கள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இனி அடுத்த கட்டமாக, கட்டண உயர்வை கண்டித்தும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவது தொடர்பாகவும், தோழமை கட்சியினரிடமும் பேச உள்ளோம். நியாயமான இந்த கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவும் பெறப்படும். அடுத்தடுத்தும் நாங்கள் திட்டமிட்டிருக்கும் போராட்டங்களில் அவர்களையும் கலந்து கொள்ள அழைப்போம். இனி, நாங்கள் நடத்தும் போராட்டம், மத்திய அரசை திரும்பிப் பார்க்க வைக்கும். இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் வரை ஓயப் போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.