ரேஷன் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர்
ரேஷன் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர்
ADDED : ஜூலை 06, 2024 02:17 AM
சென்னை'தமிழக உணவு அமைச்சர் சக்கரபாணி அறிக்கை:
பழனிசாமி ஆட்சியில், 2017 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முற்றிலுமாக வினியோகிக்கப்படவில்லை. கடந்த மே, ஜூன் மாதங்களில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று, அவர்கள் ஆட்சி போல இல்லாமல், துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்து, அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, ஜூன் 16ல் அறிக்கை வெளியிட்டு, மே மாதம் பெற்றுக்கொள்ள இயலாதவர்கள், ஜூன் மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மே மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்பட்டு விட்டது.
கடந்த மாதம் 27ம் தேதி, உணவுத்துறை மானிய கோரிக்கையின் போதும், இதுகுறித்து குறிப்பிட்டு, ஜூன் மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள், ஜூலை முழுதும் பெறலாம் என்று அறிவித்திருந்தேன்.
அதன்படி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஜூன், ஜூலை மாதங்களுக்கு, துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதை தெரிந்து கொள்ளாமலே, அரசு மீது வீண் பழி சுமத்தி, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.