'ஆலோசகர்கள் நியமனம் விளக்கம் இல்லையேல் வழக்கு' அரசுக்கு ராமதாஸ் நெருக்கடி
'ஆலோசகர்கள் நியமனம் விளக்கம் இல்லையேல் வழக்கு' அரசுக்கு ராமதாஸ் நெருக்கடி
ADDED : ஆக 29, 2024 10:09 PM
திண்டிவனம்:'எவ்வித நடைமுறைகளையும் கடைபிடிக்காமல் தமிழக அரசு ஆலோசகர்களை நியமித்துள்ளது. அது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காவிட்டால், வழக்கு தொடுக்கப்படும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழகத்துக்கு வந்த தொழில் முதலீடுகள் ரூ.9.99 லட்சம் கோடி மதிப்பில், 889 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இதன் மூலம் 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் கூறியுள்ளார். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரினால், மரபு இல்லை என்கிறார். ஆனால், அவர் எதிர்கட்சியாக இருந்தபோது, வெள்ளை அறிக்கை கேட்டது எந்த மரபுகளின் அடிப்படையில்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் ஆலோசகர்கள் என்ற பெயரில் பல துறைகளுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு போட்டி தேர்வும், இட ஒதுக்கீடும் கடைபிடிக்கவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது. இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்காவிட்டால் வழக்கு தொடரப்படும்.
மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அரிசி விலை உயர்ந்துள்ளதால், ரேஷன் கடைகளில் சன்ன ரக அரிசியை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும்.
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

