பழைய 'சரக்கு'களை விற்க 'டாஸ்மாக்' நிர்வாகம் உத்தரவு
பழைய 'சரக்கு'களை விற்க 'டாஸ்மாக்' நிர்வாகம் உத்தரவு
ADDED : பிப் 22, 2025 11:26 PM
சென்னை:மதுக்கடைகளில் மூன்று மாதங்களுக்கு மேலாக இருப்பில் உள்ள மது வகைகளை விரைவாக விற்குமாறு, கடை ஊழியர்களுக்கு, 'டாஸ்மாக்' நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது.
அவற்றில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை நாட்களில் அதை விட அதிகமாகவும், மதுபான வகைகள் விற்பனையாகின்றன.
பீர் உற்பத்தி செய்யப்பட்ட நாளில் இருந்து, ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். அதற்கு பின், அதை குடிக்கக்கூடாது. இது, மது வகைகளுக்கு பொருந்தாது.
இந்நிலையில், மதுக்கடைகளுக்கு அனுப்பப்பட்டதில் இருந்து, 90 நாட்களுக்கு மேலான மது வகைகளை முன்னுரிமை அளித்து விற்குமாறு, ஊழியர்களை, 'டாஸ்மாக்' அறிவுறுத்திஉள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது:
மதுபான ஆலையில் இருந்து, மதுக்கடைகள் வாயிலாக விற்பது வரை, அனைத்தும் கணினிமயமாக்கும் பணி நடக்கிறது. இந்த பணி, 15 மாவட்டங்களில் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களில் நடந்து வருகிறது.
எனவே, மது பாட்டிலில், 'பார்கோடு' இல்லாமல் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாக இருப்பில் உள்ள மது வகைகளை விரைந்து விற்குமாறு, ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

