டீக்கடை பெஞ்ச்: ஐ.ஏ.எஸ்.,சை ஏமாற்ற துடிக்கும் அதிகாரிகள்!
டீக்கடை பெஞ்ச்: ஐ.ஏ.எஸ்.,சை ஏமாற்ற துடிக்கும் அதிகாரிகள்!
ADDED : மார் 29, 2024 12:52 AM

'எல்லாரையும்ஒருமையில பேசி, எரிஞ்சு விழுறாங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.
''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னையில அ.தி.மு.க., புறநகர் மாவட்ட செயலர் ஒருத்தருக்கு, வலதுகரம் மாதிரி ஒரு பெண்மணி இருக்காங்க... இவங்க, கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்களை மதிக்கிறதே இல்லைங்க...
''அதுவும் இல்லாம, மட்டு, மரியாதை இல்லாம எல்லாரையும் ஒருமையில தான் பேசுறாங்க... எல்லாரிடமும் எரிஞ்சு எரிஞ்சு விழுறாங்க... இதனால, விரக்தியில இருக்கிற நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் பணிகள்ல சுணக்கம் காட்டுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கந்தன், இப்படி உட்காரும்... ஊர்ல, ஐஸ்வர்யா சவுக்கியமா வே...'' என விசாரித்த அண்ணாச்சியே, ''என்கிட்டயும் ஒரு பெண்மணி தகவல் இருக்குல்லா...'' என்றார்.
''சீக்கிரமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கோவையில, வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷன் இருக்குல்லா... இங்க ஒரு பெண் அதிகாரி இருக்காங்க வே...
''இவங்க, போலீசாருக்கு மாதம்தோறும் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து வர்ற பயணப்படியை தன் வங்கி கணக்குல வந்து விழும்படி பண்ணி, மோசடி செய்யுதாங்க... இது பத்தி போலீசார் கேட்டா, 'தெரியாம என் மொபைல் போன் நம்பரை தந்துட்டேன்... அப்புறமா பணத்தை எடுத்த தந்துடுதேன்'னு சொல்லி, கடுக்கா குடுத்துடுதாங்க வே...
''இந்த ஸ்டேஷன்ல இருந்து ஒரு எஸ்.ஐ., சமீபத்துல வேற ஸ்டேஷனுக்கு மாறி போயிட்டாரு... அப்பவும், அவரது பயணப்படியை இந்த பெண் அதிகாரியே வாங்கியிருக்காங்க...
''அது மட்டுமில்லாம, தான் சார்ந்த சமுதாயத்தினருக்கு மட்டும் எளிதான பணிகளை குடுக்கிறாங்கன்னும் இவங்க மேல ஏகப்பட்ட புகார்கள் வருது வே...'' என்றார், அண்ணாச்சி.
''கிருஷ்ணவேணி மேடம் மெசேஜ் பண்ணியிருக்காங்க...'' என, மொபைல் போனை பார்த்து முணுமுணுத்த குப்பண்ணாவே, ''மொழி தெரியாத ஐ.ஏ.எஸ்., அதிகாரியை ஏமாத்த பாக்கறா ஓய்...'' என்றார்.
''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனரா, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 2019 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இருக்கார்... இவர், தனக்கு வரும் மாநகராட்சி குறித்த புகார்களை அடுத்த கட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கறார் ஓய்...
''இவருக்கு கீழ இருக்கற இரண்டாம் கட்ட அதிகாரிகள், தமிழ் தெரியாத ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நன்னா ஏமாத்தறா... சமீபத்துல, 'முக்கிய டெண்டர்களை எடுக்க விண்ணப்பிச்சவர் தந்த லாரிகள், ரோடு போடும் வாகனங்களின் பட்டியல் மோசடியானது'ன்னு கமிஷனருக்கு புகார் வந்துது ஓய்...
''ஆனா, அதெல்லாம் சரிதான்னு சொல்லி, அவருக்கே கான்ட்ராக்ட் தர இரண்டாம் கட்ட அதிகாரிகள் துடியா துடிச்சா... கமிஷனர், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அந்த வாகன பட்டியலை அனுப்பி விசாரிச்சப்ப, அனைத்தும் போலின்னும், வேற கான்ட்ராக்டர்களின் வாகனங்களை தன்னோடதா காட்டி விண்ணப்பிச்சதும் தெரியவந்துடுத்து ஓய்...
''உஷாரான கமிஷனர், பல கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து பண்ணிட்டார்... இதனால, கமிஷனர் மேல, கார்ப்பரேஷன் அதிகாரிகள் பலரும் கோபத்துல இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.

