மத்திய அரசுக்கு நன்றியும், கண்டனமும் மா.செ.,க்கள் கூட்டத்தில் தி.மு.க., தீர்மானம்
மத்திய அரசுக்கு நன்றியும், கண்டனமும் மா.செ.,க்கள் கூட்டத்தில் தி.மு.க., தீர்மானம்
ADDED : ஆக 16, 2024 08:44 PM
சென்னை:கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் மத்திய அரசுக்கு நன்றியும், நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டும் மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்து, தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டத்தில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள, 'தென் திசையின் தீர்ப்பு' என்ற நுாலை, பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார். கடந்த 10 தேர்தல்களில், வெற்றி தேடித் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்தும், நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானங்கள் விபரம்:
* முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கி தந்த முப்பெரும் விழா, செப்., 17ல், சென்னையில் எழுச்சி மிகுந்த விழாவாக நடத்தப்படும்
* தமிழகம் முழுதும் சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும். தெருமுனைப் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். கொடிக் கம்பங்களை புதுப்பிக்க வேண்டும்
* 'உறவுக்குக் கை கொடுப்போம் - உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்ற கருணாநிதியின் வழியில் மாநில உரிமைககளை காத்திடுவோம். தன் நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தால், இந்திய ஜனநாயகத்தை காக்கிற துாணாகத் திகழ்ந்த கருணாநிதியின் புகழைப் போற்றுகிற வகையில், மத்திய அரசு, 100 ரூபாய் நாணயம் வெளியிட முன்வந்தமைக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்.
* அதே வேளையில், தமிழகத்திற்கு எந்த சிறப்பு திட்டத்தையும் வழங்காததுடன், முறையான நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. ரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாரபட்சம் காட்டுவதை வழக்கமாக வைத்து, தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் மத்திய பா.ஜ., அரசை கண்டிக்கிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

