முதல்வர் பாதுகாப்பு பிரிவு அதிகாரி பெயரில் பணம் சுருட்டிய இருவர் கைது
முதல்வர் பாதுகாப்பு பிரிவு அதிகாரி பெயரில் பணம் சுருட்டிய இருவர் கைது
ADDED : ஆக 07, 2024 02:14 AM

சென்னை:முதல்வர் பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி., திருநாவுக்கரசு பெயரை பயன்படுத்தி, 2 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை, 'சைபர்' குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக காவல் துறையின் முதல்வர் பாதுகாப்பு பிரிவில், டி.ஐ.ஜி., திருநாவுக்கரசு பணிபுரிகிறார். மர்ம நபர்கள், இவரின் படம் மற்றும் பெயரை பயன்படுத்தி, 'பேஸ்புக்' தளத்தில், போலி கணக்கு துவங்கி உள்ளனர். பின், இவரின் நட்பு வட்டத்தில் இருப்போருக்கு அழைப்பு விடுத்து, போலி கணக்குடன் இணைத்துள்ளனர்.
பின், 'மெசஞ்சரில்' திருநாவுக்கரசு அனுப்புவதுபோல, நண்பர்களுக்கு தகவல் அனுப்பி பண மோசடிக்கு முயற்சித்துள்ளனர்.
இதுகுறித்து பிப்ரவரியில், திருநாவுக்கரசு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.
மோசடி நபர்கள், ராஜஸ்தான் மாநிலம், அல்வார் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பீர்பாஷா தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு, அதே பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான், 31, வாஷித்கான், 24, ஆகியோரை கைது செய்து, சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்துஉள்ளனர்.
போலீசாரிடம் ஹனீப்கான் அளித்துள்ள வாக்குமூலம்:
எங்கள் மாநிலத்தில், இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் பல கும்பல்கள் உள்ளன.
எங்கள் கும்பலின் தலைவனிடம் மோசடியில் ஈடுபட பயிற்சி எடுத்துள்ளோம். எங்களின் முழுநேரத் தொழிலே, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் படம் மற்றும் பெயரை பயன்படுத்தி, பணமோசடி செய்வது தான்.
மெசஞ்சரில், திருநாவுக்கரசு போல, அவரின் நட்பு வட்டத்தில் இருப்போருக்கு, 'என் நண்பர் சந்தோஷ்குமார், சென்னையில் சி.ஆர்.பி.எப்., அதிகாரியாக உள்ளார். தற்போது பணிமாறுதலில் வெளியூர் செல்வதால், விலை உயர்ந்த பர்னிச்சர் பொருட்களை விற்க உள்ளார்.
உங்கள் மொபைல் போன் எண்ணை அனுப்புங்கள், 'வாட்ஸாப்'பில், சந்தோஷ்குமாரின் படம் மற்றும் பர்னிச்சர் பொருட்களின் படங்களை அனுப்புகிறேன்' என, தகவல் அனுப்புனோம். டி.ஐ.ஜி.,யே கேட்பதாக நம்பி, மொபைல் போன்களை அனுப்பி வைத்தனர்.
இப்படி பெற்ற மொபைல் போன் எண்களை பயன்படுத்தி, பர்னிச்சர் பொருட்களின் படங்களை அனுப்பி, அதை விற்பதாக, 2 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.