விஜய் கட்சிக்கு 18 சதவீதம் ஓட்டு மா.செ., பேச்சால் தி.மு.க.,வில் சலசலப்பு
விஜய் கட்சிக்கு 18 சதவீதம் ஓட்டு மா.செ., பேச்சால் தி.மு.க.,வில் சலசலப்பு
ADDED : பிப் 21, 2025 08:57 PM
'நடிகர் விஜய்க்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம் இருப்பதால், த.வெ.க.,வுக்கு 18 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும்' என, கட்சி நிர்வாகிகள் மத்தியில், மாவட்ட செயலர் பேசிய பேச்சால், தி.மு.க.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமீபத்தில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் சிற்றரசு தலைமையில், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும், நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் உள்ள சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், அந்த நிர்வாகிகள் அனைவரும் கூடி ஆலோசித்தனர். அக்கூட்டத்தில் மாவட்டச் செயலர் சிற்றரசு பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
கட்சி பணிகளை சரிவர செய்யாமல் இருக்கிறீர்கள். இப்படி இருந்தால், தேர்தலில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். விஜய் அரசியலுக்கு வந்த பின், நம் கட்சிக்கு இளைஞர்கள் வருகை குறைந்து விட்டது. என்னுடைய கணக்குப்படி, அவரது கட்சிக்கு, 18 சதவீதம் ஓட்டுக்கள் வரை, இந்த மாவட்டத்தில் கிடைக்கும் என தெரிகிறது.
அதை புரியாமல், நம் கட்சி நிர்வாகிகள் இருக்கிறீர்கள். ஆளும் கட்சியாக இருக்கும்போதே, இந்த நிலைமை என்றால், எதிர்க்கட்சியானால் நீங்கள் எப்படி செயல்பட போகிறீர்களோ தெரியவில்லை.
இந்த சட்டசபை தேர்தல் நமக்கு சவால் விடும் தேர்தல். இளைஞர்களும், இளம் வாக்காளர்களும் விஜய் பக்கம் செல்வதை, எப்படியாவது தடுக்க வேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

