ADDED : ஆக 04, 2024 12:45 AM
சென்னை:பிராந்தியில் பூச்சி மருந்து கலந்து, கணவரை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மனைவிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் சுலோச்சனா; இவரது நடத்தையில் கணவர் சந்தேகம் அடைந்தார். வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக, மனைவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கணவருக்கு வாங்கி கொடுத்த பிராந்தியில், பூச்சி மருந்தை கலந்ததாகவும், அதை குடித்த கணவர் இறந்ததாகவும், சுலோச்சனாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுலோச்சனாவின் கணவர் சந்தேகப்பட்ட நபருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2012 நவம்பரில் சம்பவம் நடந்தது.
இந்த வழக்கை விசாரித்த கள்ளக்குறிச்சி செஷன்ஸ் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சுலோச்சனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மற்றொரு நபரை விடுதலை செய்தது.
தண்டனையை எதிர்த்து, சுலோச்சனா மேல்முறையீடு செய்தார்.
மனுவை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பிராந்தியில் பூச்சி மருந்தை கலந்து, கணவருக்கும், அவரது நண்பருக்கும், சுலோச்சனா கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை, போலீஸ் தரப்பு நிரூபிக்கவில்லை.
இந்த வழக்கில் சாட்சிகள் அளித்த சாட்சியங்கள், நம்பிக்கை அளிப்பதாக இல்லை. விஷம் கொடுக்கப்பட்டதால், மனுதாரரின் கணவர் இறந்துள்ளார் என்பதை, போலீஸ் தரப்பு நிரூபித்துள்ளது.
ஆனால், பிராந்தியில் சுலோச்சனா தான் விஷம் கலந்து, கணவருக்கும், அவரது நண்பருக்கும் கொடுத்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை.
இறந்தவரின் வீட்டில் இருந்து காலி பிராந்தி பாட்டிலும், பூச்சி மருந்து பாட்டிலும் கைப்பற்றப்பட்டதாக கூறியது, நம்பத்தகுந்ததாக இல்லை. விஷம் கலந்ததால், தன் சகோதரர் இறந்தார் என்பது உறுதியாக தெரிந்திருந்தால், புகார் அளிக்க இவ்வளவு தாமதம் ஏற்பட தேவையில்லை.
எனவே, சுலோச்சனாவுக்கு சந்தேகத்தின் பலனை பெற உரிமை உள்ளது. கள்ளக்குறிச்சி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.