கொலை மிரட்டல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 1 நாள் போலீஸ் காவல்
கொலை மிரட்டல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 1 நாள் போலீஸ் காவல்
ADDED : ஜூலை 24, 2024 07:43 PM
கரூர்:கொலை மிரட்டல் வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூர் அருகே, நிலம் அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து, கரூர் நீதிமன்றம் கடந்த, 22ல் உத்தரவிட்டது. கரூர் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் நிறைவு பெற்றதால், சி.பி.சி.ஐ.டி., போலீசார், விஜய பாஸ்கரை நேற்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் தொழிலதிபர் பிரகாஷும், நிலம் அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் ஆதரவாளர்கள், கொலை மிரட்டல் விடுத்ததாக வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் ஜூன், 22ல் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வாங்கல் போலீசார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட பலர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிலும் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் போலீஸ் காவல் கேட்டு, கரூர் நீதிமன்றத்தில் வாங்கல் போலீசார் மனுதாக்கல் செய்தனர். நேற்று வழக்கை நீதிபதி பரத்குமார் விசாரித்து, ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். பின், விஜயபாஸ்கரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.