35 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயம்; மத்திய அமைச்சர் துவக்கி வைப்பு
35 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயம்; மத்திய அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : செப் 07, 2024 04:38 AM

பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுதும், உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. குறிப்பாக சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுப்பொருளான வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில், பருவமழை காரணமாக, காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இவற்றின் வரத்து குறைந்துள்ளதால், நாட்டில் பல்வேறு முக்கிய மாநிலங்களின் தலைநகரங்களில், காய்கறிகளின் சில்லரை விற்பனை உச்சம் தொட்டுள்ளது.
குறிப்பாக, மிக முக்கியமான அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை உயர்வால், எல்லா மாநிலங்களிலும் மக்கள் அவதிப்பட துவங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில், 1 கிலோ வெங்காயத்தின் விலை 33.41 ரூபாயாக இருந்தது. ஆனால், மத்திய நுகர்வோர் நலத்துறை இணையதளத்தில், தற்போது, அகில இந்திய அளவில் வெங்காயத்தின் சராசரி சில்லரை விலை, கிலோ ஒன்றுக்கு 49 ரூபாய் 21 பைசாவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும், 47.29 சதவீதம் அதிகம்.
சில்லரை விற்பனை என்றில்லை. வெங்காயத்தின் மொத்த விலை விற்பனையும் கூட பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே செப்டம்பரில், 1 குவின்டால் வெங்காயத்தின் விலை 2,560 ரூபாய் 19 பைசாவாக இருந்தது.
ஆனால், தற்போது 1 குவின்டால் வெங்காயத்தின் விலை, 4,158 ரூபாய் 71 பைசாவாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஓராண்டுக்குள் 62.40 சதவீத அளவுக்கு விலை உயர்வு நடந்துள்ளது.
இந்நிலையில் தான், வெங்காயத்தின் தேவை கருதியும், பொதுமக்களிடையே எந்த வகையிலும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
அதன்படி, நடமாடும் வேன்கள் மற்றும் கூட்டுறவு கடைகள் வாயிலாக 35 ரூபாய்க்கு, 1 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்து கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் வாயிலாக, இந்த சில்லரை விற்பனையை மத்திய அரசு துவங்கியுள்ளது.
முதற்கட்டமாக, டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இந்த சில்லரை விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
நடமாடும் வேன்களில் வெங்காய விற்பனையை, டில்லியில் துவங்கி வைத்த மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று துவக்கி வைத்தார்.
- நமது டில்லி நிருபர் -