ADDED : ஜூன் 28, 2024 03:04 AM
சென்னை:''தமிழகத்தில் நடப்பாண்டு கூட்டுறவு அமைப்புகள் வழியே, 1 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்,'' என, அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறை சார்பில், அமைச்சர் பெரிய கருப்பன் வெளியிட்ட அறிவிப்புகள்:
அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக, நடப்பாண்டு கூட்டுறவு அமைப்புகள் வழியே, 1 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்
தானியங்களை பாதுகாப்பாக சேமிக்க, கூட்டுறவு அமைப்புகள் வழியே, 25,000 டன் கொள்ளளவுடன், நவீன தானிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்
கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைகளுக்கு தீர்வு காண, இரு மாதங்களுக்கு ஒரு முறை, மண்டல அளவில், 'பணியாளர் நாள்' நிகழ்வு நடத்தப்படும்
பெருநகரங்களில் காய், கனி அங்காடிகள் அமைக்கப்படுவதுடன், முக்கிய மாவட்டங்களை இணைத்து, காய், கனி வழித்தடங்கள் உருவாக்கப்படும்
ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருட்களை வினியோகம் செய்ய, ஜி.பி.எஸ்.,சுடன் கூடிய, 'இ - வழித்தடம்' ஏற்படுத்தப்படும்
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில், ஆன்லைன் கடன் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்
கூட்டுறவு சங்க சேவைகளை மக்கள் அறிந்து கொள்ள, புதிய கூட்டுறவு மொபைல் ஆப் உருவாக்கப்படும்
அனைத்து மாநகராட்சி மற்றும் பெருநகரங்களில், கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்கள் துவக்கப்படும்
கூட்டுறவு அமைப்புகளில் புதிய முயற்சிகளை மேம்படுத்த, 'கூட்டுறவில் புதிய முயற்சிகள்' திட்டம்; நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களுக்கு புத்துயிரூட்ட, 'கூட்டுறவு இணைப்பு சங்க ஆதரவு திட்டம்' செயல்படுத்தப்படும்
பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் சேவை விரிவுபடுத்தப்படும்
நலிவடைந்துள்ள உப்பு உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் புத்துயிரூட்டப்படும்; காஞ்சிபுரத்தில், 'காஞ்சி கூட்டுறவு வளாகம்' கட்டப்படும்
வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் வழியே, சிறுதானியங்கள் கொள்முதல் செய்யவும், சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்
கூட்டுறவு சங்கங்களில் உள்ள வாராக்கடன்களை வசூலிக்க, 'இ - தீர்வு' திட்டம் துவக்கப்படும்
கூட்டுறவு சங்கங்களின் 100 கிளைகள் துவக்கப்படும்
மாநில அளவில் சிறந்த சங்கங்கள், பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்
இவ்வாறு, அவர் அறிவித்துள்ளார்.

