வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை
வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை
ADDED : ஏப் 07, 2024 01:49 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, 10- லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் எஸ்.பி.ஐ.,யின் ஏ.டி.எம்., மையம் உள்ளது.
இதில், நேற்று முன்தினம் மாலை, 16 லட்சம் ரூபாயை ஊழியர்கள் நிரப்பி சென்றனர். நேற்று காலை, ஏ.டி.எம்., இயங்கும் கட்டடத்தின் உரிமையாளர் பார்த்தபோது, ஏ.டி.எம்., இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. குருபரப்பள்ளி போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து, போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:
ஏ.டி.எம்., இயந்திரத்தை, நேற்று அதிகாலை மர்மநபர்கள் காஸ் கட்டர் சாதனத்தால் உடைத்து, பணத்தை எடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம், 16 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்ட நிலையில், 10 லட்சம் ரூபாய் கொள்ளை போய் இருக்கலாம் என தெரிகிறது.
ஏ.டி.எம்., இயந்திரத்தை திருட முயன்றவர்கள், 'சிசிடிவி' கேமராவில் கறுப்பு நிற ஸ்பிரே அடித்துள்ளனர். அங்கு செக்யூரிட்டியும் இல்லை. இது குறித்து நன்கு தெரிந்தவர்களே, திருட்டில் ஈடுபட்டிருக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஏ.டி.எம்., கொள்ளையர்களை பிடிக்க, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தலைமையில், ஏ.டி.எஸ்.பி., சங்கு, டி.எஸ்.பி., தமிழரசி உள்ளிட்டோர் அடங்கிய, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

