ADDED : மார் 29, 2024 09:41 PM
சென்னை:கோடை வெயில் தீவிரமாகியுள்ள நிலையில், ஆங்காங்கே கோடை மழையும் பெய்து, மக்களை குளிர்விக்கிறது.
தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமாகியுள்ளது. நேற்று, தர்மபுரி, கரூர் பரமத்தி, ஈரோடு, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலுார் ஆகிய, 10 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.
சென்னையில் அதிகபட்சமாக, 36 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவானது.
வரும், 1ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும். பகலில் வெயில் தீவிரம் காட்டும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் வெயிலுக்கு நடுவில், சில இடங்களில் கோடை மழை பெய்து குளிரூட்டுகிறது. நேற்று காலை நிலவரப்படி, துாத்துக்குடியில், 4; காயல்பட்டினம், 3; கன்னியாகுமரி, கருப்பாநதி அணை, 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்மாவட்ட பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால், ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

