1,000 முதல்வர் மருந்தகம் பொங்கல் முதல் செயல்படும்: ஸ்டாலின் அறிவிப்பு
1,000 முதல்வர் மருந்தகம் பொங்கல் முதல் செயல்படும்: ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : ஆக 16, 2024 01:23 AM

சென்னை:
சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். அவர் கூறியதாவது:
சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் கடந்து விட்டன. தியாகிகளின் கனவான, அனைவருக்குமான இந்தியாவை நாம் உருவாக்கி வருகிறோம்.
நம் மாணவர்கள் நல்ல வேலை வாய்ப்புகளை பெற்று, வறுமை இல்லாத, சமத்துவம் வாய்ந்த, அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
தனியார் துறையில், மூன்று ஆண்டுகளில் 78 லட்சம் வேலை வாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 65,483 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது. வரும் 2026 ஜனவரிக்குள், 75,000க்கும் அதிகமான அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.
மலிவு விலை மருந்து
ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும், குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், 'முதல்வர் மருந்தகம்' திட்டம் பொங்கல் நாளில் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும்.
திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, மருந்தாளுனநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும், தேவையான கடனுதவியோடு, லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
காக்கும் கரங்கள்
முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டம் அறிமுகம் செய்யப்படும். முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க, 1 கோடி
ரூபாய் வரை, வங்கி கடன் பெற வழி செய்யப்படும். கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். பணியின்போது உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், 400 முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், 400 கோடி ரூபாய் திட்டங்களுக்கு, 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும்.
ஓய்வூதியம் உயர்வு
விடுதலை போராட்ட வீரர்களுக்கு, தற்போது வழங்கி வரும் 20,000 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம், 21,000 ரூபாயாக உயர்த்தப்படும். தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கும் 11,000 ரூபாய் ஓய்வூதியம், 11,500 ரூபாயாக உயர்த்தப்படும். வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் போன்றோரின் வழித்தோன்றல்கள் சிறப்பு ஓய்வூதியம் 10,000 ரூபாயில் இருந்து, 10,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
பேரிடர் தடுப்புக் குழு
நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்ளடக்கிய மலைப்பகுதிகளில் மழையினால் ஏற்படக்கூடிய இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வனத்துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல் துறை வல்லுனர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும். அதன் பரிந்துரைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக, நான் இருக்க ஆசைப்படுகிறேன். இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக, தமிழகத்தை உருவாக்க என்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். இந்தியா உலகுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டிய நாடு. 'நம்மை காக்கும் நாட்டைக் காப்போம்' என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.