வெளிநாடு வாழ் தமிழ் மாணவர்கள் 107 பேர் ஆக., 1ல் சென்னை வருகை
வெளிநாடு வாழ் தமிழ் மாணவர்கள் 107 பேர் ஆக., 1ல் சென்னை வருகை
ADDED : ஜூன் 30, 2024 12:56 AM
சென்னை:வெளிநாடுகளில் இருந்து, 107 தமிழ் மாணவர்கள், ஆக.,1ல் தமிழகம் வர உள்ளனர்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள், தமிழகத்தின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வகையில், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழக பண்பாட்டு சுற்றுலா அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என, கடந்த ஆண்டு ஜன.,12 முதல்வர் அறிவித்தார்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, ஆஸ்திரேலியா, பிஜி, இலங்கை, கனடா நாடுகளில் இருந்து, 57 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தமிழக அரசின், அயலக தமிழர் நல ஆணையரகம் சார்பில், கடந்த டிச., 27 முதல் இந்த ஆண்டு ஜன.,10 வரை தமிழகத்தின் முக்கிய சுற்றுலா, வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அடுத்த கட்டமாக, ஆக., 1 முதல் 15 வரை, இச்சுற்றுலா நடத்தப்பட உள்ளது. இதற்காக தென்னாப்பிக்கா, உகாண்டா, பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ் உட்பட 11 நாடுகளை சேர்ந்த, 107 அயலக தமிழ் மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள், சென்னை, செங்கல்பட்டு, கடலுார், அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். சென்னையில் ஆக., 15 நடக்கும் சுதந்திர தின விழாவிலும் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான முன்னேற்பாடு குறித்த கூட்டம், நேற்றுமுன்தினம் அயலகத்தமிழர் நல ஆணையரகத்தில் நடந்தது. அமைச்சர் மஸ்தான், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

