ADDED : மார் 25, 2024 05:25 AM

சென்னை : பத்தாம் வகுப்பு பொது தேர்வு நாளை துவங்க உள்ளது. இதில், 9.10 லட்சம் பேருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் 1ல் துவங்கி, 22ம் தேதி நிறைவு பெற்றது. பிளஸ் 1 தேர்வு மார்ச் 4ல் துவங்கி, இன்றுடன் முடிகிறது.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வு நாளை துவங்க உள்ளது. மாநிலம் முழுதும், 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 12,616 பள்ளிகளைச் சேர்ந்த, 9.10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களில், 4.52 லட்சம் மாணவியர்; ஒரு மாற்று பாலினத்தவர் அடங்குவர்.
மேலும், 28,827 தனித்தேர்வர்களும், 235 சிறை கைதிகளும் தேர்வு எழுத உள்ளனர். மொத்தம், 48,700 ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலர்கள், தேர்வு கண்காணிப்பு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
முதல் நாளான நாளை, தமிழ் மொழி தேர்வு நடக்கிறது. அடுத்து, ஆங்கிலம், கணிதம், அறிவியல், விருப்ப மொழிப்பாடம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. ஏப்., 8ல் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிகிறது. தேர்வு முடிவுகள், மே 10ல் வெளியிடப்பட உள்ளன.

