10ம் வகுப்பு கணித தேர்வு 'ஈசி': மாணவர்கள் மகிழ்ச்சி
10ம் வகுப்பு கணித தேர்வு 'ஈசி': மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 02, 2024 12:18 AM
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எளிதான கேள்விகளாக இருந்ததால், மாணவ - மாணவியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், 100க்கு 100 மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 26ம் தேதி துவங்கியது. நேற்று கணிதத்தேர்வு நடந்தது. தேர்வு முடிந்து மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வந்தனர். வினாத்தாள் குறித்து, மாணவ - மாணவியர் கூறியதாவது:
பெரும்பாலான வினாக்கள் எளிதாக விடை எழுதும் வகையில் இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள், கட்டாய வினா, வரைகட்டம் போன்றவை, வகுப்பறையில் ஆசிரியர்களால் கற்றுக் கொடுத்து, தேர்வில் எதிர்பார்த்தவையாக இருந்தன.
பெரும்பாலானவர்கள், 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். இதை விட மிகவும் ஈசியான வினத்தாள் இருக்க முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வினாத்தாள் குறித்து, சென்னை பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் சுரேஷ் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தரமான கேள்விகளுடன் கூடிய எளிதான வினாத்தாளாக இருந்தது.
பொதுவாக, ஒரு கிரியேட்டிவ் கேள்வி இடம் பெறும். இந்த முறை இரு கிரியேட்டிவ் கேள்விகள் இருந்தாலும், அதில் மாணவர்கள் எளிதாக மதிப்பெண் பெற முடியும்.
மேலும், 35வது எண்ணில் இடம் பெற்ற நாற்கரத்தின் பரப்பு கேள்வியில், வரிசையை மாற்றி கணக்கிட்டால், புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விடை வராது. அதில் மாணவர்கள் தவறு செய்திருந்தால், அவர்களுக்கு பதில் எழுதிய படிநிலைக்கான மதிப்பெண் தருவர்.
இந்த வினாத்தாள் எளிதானது என்றாலும், சரியாக யோசித்து எழுதாவிட்டால், மதிப்பெண் குறைந்து விடும் தன்மையில் கேள்விகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்றைய தேர்வில், 9.10 லட்சம் மாணவ - மாணவியர்; 20,000 தனி தேர்வர்கள் பங்கேற்க வேண்டும். அதற்கு பதில், 1,806 தனி தேர்வர்கள் உட்பட, 17,803 பேர் தேர்வில் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆகினர்.
நேற்றைய தேர்வில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 பேர் பிடிபட்டனர்.

