பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 12, 2024 01:26 AM
சென்னை:பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத, தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், மே 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.ஜூலை 2 முதல் 8 வரை தேர்வுகள் நடக்க உள்ளன.
பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த, தேர்வுக்கு வராத மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்காக, இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தனித்தேர்வர்கள் தவிர்த்து மற்ற மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று, மே 16 முதல் ஜூன் 1 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள தனித்தேர்வர்கள், ஏற்கனவே தேர்வில் தோல்வி அடைந்த தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர, வரும் 16 முதல் 24ம் தேதிக்குள், மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று, 125 ரூபாய் கட்டணம் செலுத்தி, பெயர்களை பதிவு செய்து ஒப்புகைச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். இதை காண்பித்தால் மட்டுமே, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர். ஒப்புகைச்சீட்டு பெற்ற தனித்தேர்வர்கள், கருத்தியல் தேர்வு எழுத, சேவை மையம் சென்று ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்த பின், சேவை மையம் வழங்கும் ஒப்புகைச்சீட்டில் உள்ள, விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, ஹால் டிக்கட் பதிவிறக்கம் செய்ய முடியும்.
குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்க தவறியவர்கள், சிறப்பு அனுமதி கட்டணம் 500 ரூபாயுடன், ஜூன் 3, 4ம் தேதிகளில், ஆன்லைனில் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, சிறப்பு அனுமதி கட்டணம் கிடையாது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், விருப்ப மொழி, சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் முறையே, ஜூலை 2, 3, 4, 5, 6, 8 தேதிகளில் தேர்வு நடக்க உள்ளது. மேலும் விபரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.