வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து விருத்தாசலம் அருகே 11 பேர் காயம்
வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து விருத்தாசலம் அருகே 11 பேர் காயம்
ADDED : ஆக 01, 2024 05:55 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சாலையின் குறுக்கே ஓடிய கன்றுக்குட்டி மீது மோதிய வேன் வாய்க்காலில் கவிழ்ந்ததில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், மாரண்ட் அள்ளி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர்,49; இவர், மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் நேற்று முன்தினம் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு டிஎன்-29-பிஆர்-7836 பதிவெண் கொண்ட மாருதி வேனில் உறவினர்கள் 7 பேருடன் ஊருக்கு புறப்பட்டார். கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்கூடல் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே ஓடிய கன்றுக்குட்டி மீது வேன் மோதி, அவ்வழியே சென்ற பைக் மீது மோதிவிட்டு அருகில் உள்ள வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே இறந்தது. வேனில் பயணித்த ஸ்ரீதர் உள்ளிட்ட 8 பேரும், பைக்கில் சென்ற விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை வெங்கடேசன்,46; உள்ளிட்ட மூவரும் படுகாயமடைந்தனர். அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.