ஓசூரில் அடுத்தடுத்து 11 வாகனங்கள் மோதல் ஒருவர் பலி; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஓசூரில் அடுத்தடுத்து 11 வாகனங்கள் மோதல் ஒருவர் பலி; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ADDED : ஆக 26, 2024 04:46 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பேரண்டப்பள்ளி வனப்பகுதியில், நேற்று மதியம் 3:45 மணிக்கு, கிரானைட் சிலாப் கற்கள் ஏற்றிய லாரி சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற கார் மீது மோதி, மேலும் இரு கன்டெய்னர்கள் மீது மோதியது.
இதனால் அந்த லாரியின் பின்னால் வந்த வாகனங்கள், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.
மொத்தம் ஏழு கார்கள், ஒரு அரசு பஸ், இரு கன்டெய்னர் லாரி, விபத்துக்கு காரணமான லாரி என, 11 வாகனங்கள் மோதிக்கொண்டன.
கார்களில் பயணித்த கோவையை சேர்ந்த ஆயில் மில் உரிமையாளர் வெங்கடேஷ், 33, அவரது நண்பர் அரவிந்த், 30, கிருஷ்ணகிரி அடுத்த ஜக்காரப்பள்ளியை சேர்ந்த தனியார் பள்ளி வாகன டிரைவர் ரவி, 45, உட்பட, 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
அப்பகுதி மக்கள் அனைவரையும் மீட்டு, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் இருந்த பள்ளி வேன் டிரைவர் ரவி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இறந்தார்.
விபத்தில் சிக்கிய வாகனங்களால், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பல கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தன.
ஹட்கோ போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
ஓராண்டில் 40 பேர் பலி
ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சுண்டகிரி, மேலுமலை மற்றும் போலுப்பள்ளி அரசு மருத்துவமனை என, 5 இடங்களில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தவிர, ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே, சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதனால், ஓராண்டாகவே தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பாலம் அமைக்கும் இடங்களில், கடந்த ஓராண்டில் 40க்கும் மேற்பட்டோர் விபத்தில் பலியாகி உள்ளனர்.