தமிழகத்தில் 1,197 பேருக்கு மத்திய அரசின் 'இன்ஸ்பையர்' விருது
தமிழகத்தில் 1,197 பேருக்கு மத்திய அரசின் 'இன்ஸ்பையர்' விருது
ADDED : மார் 08, 2025 12:31 AM
பொள்ளாச்சி:தமிழகத்தில், 1,197 பேருக்கு மத்திய அரசின், 'இன்ஸ்பையர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, பள்ளி மாணவர்களுக்கு, 'இன்ஸ்பையர்' விருது வழங்குகிறது. இந்த விருது, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படுகிறது.
இன்ஸ்பையர் விருது பெறும் மாணவர்கள், அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். கண்டுபிடிப்புகளை மாவட்ட அளவில் காட்சிப்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெறுவோர் மாநில போட்டிக்கு பரிந்துரைக்கப்படுவர்.
மாநில அளவிலான, 'இன்ஸ்பையர்' விருது பெற, நாட்டில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் பங்கேற்கலாம். முதல் பரிசு பெறும் கட்டுரை மற்றும் படைப்புக்கு, 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
அதன்படி, 2024 - 25ம் ஆண்டுக்கான, 'இன்ஸ்பையர்' விருது, தமிழகத்தில், 1,197 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 25 பேருக்கும், பொள்ளாச்சி பகுதியில், 11 பேருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அதில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி தமிழரசிக்கு இன்ஸ்பையர் விருது - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது வழங்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற மாணவிக்கு, பள்ளி தலைமையாசிரியர், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர் பாராட்டினர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
தற்போது, தமிழக அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவியின் கண்டுபிடிப்பான மெடிக்கல் அலர்ட் கருவி, 'முதியோர்கள், மாத்திரை, மருந்துகளை சரியான நேரத்துக்கு உட்கொள்வதற்கு, 'அலர்ட்' செய்ய உதவுகிறது. தனியாக அவர்கள் நடந்து செல்லும் போது, கீழே விழுந்தாலோ, அசம்பாவிதம் நடந்தாலோ, அந்த டிவைஸில் இணைக்கப்பட்ட மொபைல்போனுக்கு தகவல் சென்று விடும். மேலும், அவர்களது லொக்கேஷனும் சென்று விடும். இந்த படைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.