ஓசூரில் குவாரி உரிமையாளர் வீட்டில் ரூ.1.20 கோடி, 100 சவரன் பறிமுதல்
ஓசூரில் குவாரி உரிமையாளர் வீட்டில் ரூ.1.20 கோடி, 100 சவரன் பறிமுதல்
ADDED : ஏப் 01, 2024 04:22 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சீத்தாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் லோகேஷ்குமார், 35; பேரண்டபள்ளியில் ஜல்லி கிரஷர் வைத்துள்ளார். மார்ச், 28ல் காரில் பெங்களூரு சென்றவர் மீண்டும் ஓசூர் திரும்பினார்.
ஜூஜூவாடி சோதனை சாவடியில், தேர்தல் பறக்கும் படையினர் அவரது காரில் சோதனை செய்து, உரிய ஆவணம் இல்லாத, 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, ஓசூர் வருமான வரித்துறை இணை இயக்குனர் விஷ்ணு பிரசாத் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினர், நேற்று அதிகாலை, 3:00 மணி முதல் லோகேஷ் குமார் வீட்டில் சோதனை செய்தனர்.
சோதனை முடிந்தவுடன், காலை, 10:15 மணிக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள், லோகேஷ் குமார் வீட்டிலிருந்து ஒரு பெரிய டிராவல் பேக்கை, போலீசாரின் ரோந்து வாகனத்தில் மூக்கண்டப்பள்ளியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அதில் கொண்டு வரப்பட்ட பணத்தை எண்ணியதில், 1.20 கோடி ரூபாய் இருந்தது. சோதனையில், 100 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
பேரண்டப்பள்ளியில் உள்ள அவரது கிரஷரிலும் சோதனை நடந்தது. லோகேஷ் குமார், கர்நாடகா மாநிலம், கே.ஆர்.புரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜின் உதவியாளர் மஞ்சுநாத் மருமகன்.
எனவே, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் பணத்தை வழங்க, வீட்டில் பதுக்கி வைத்திருந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

