13 வயது சிறுமி பலாத்காரம் 17 வயது சிறுவன் மீது 'போக்சோ'
13 வயது சிறுமி பலாத்காரம் 17 வயது சிறுவன் மீது 'போக்சோ'
ADDED : பிப் 23, 2025 07:18 AM
அவிநாசி : அவிநாசி அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, 17 வயது சிறுவன் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த, அரசு பள்ளியில் படிக்கும், 13 வயது சிறுமியுடன் பழகி வந்தார். கடந்த 18ம் தேதி, சிறுமியின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சிறுமியின் தாய், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
இதையறிந்த சிறுவன், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமியை காணாததால், அவரை தேடி வந்த பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் போலீசாரிடம், 'மகளை காணவில்லை' என புகார் அளித்தனர். விசாரணையில், சிறுவனின் வீட்டில் சிறுமி தங்கியது தெரியவந்தது.
சிறுமியை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனை கைது செய்த அவிநாசி அனைத்து மகளிர் போலீசார், மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
புகார் பெற இழுத்தடிப்பு
'சிறுமியை காணவில்லை' என கடந்த 19ம் தேதி புகார் மனுவை அவிநாசி அனைத்து மகளிர் போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் அளித்தனர்.
புகார் மனுவை போலீசார் பெற மறுத்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்த பின், போலீசார், 20ம் தேதிதான் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு எப்.ஐ.ஆர்., பதிவிட்டுள்ளனர்.
வக்கீல் சத்தியமூர்த்தி என்பவர் கூறுகையில், ''அவிநாசி சப் டிவிஷனை பொறுத்தவரை போக்சோ புகார்களை உடனுக்குடன் விசாரிக்காமல் காலம் தாழ்த்துவதாக புகார் அதிகளவில் உள்ளது. இதுபோன்ற வழக்கில் பாதிக்கப்பட்டோரை உடனே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினால் மட்டுமே வழக்கு விசாரணைக்கு ஆதாரம் கிடைக்கும். அலைக்கழித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமல் ஆதாரங்களை அழிக்கும் விதமாக போலீசார் நடந்துகொள்கின்றனர்'' என்றார்.
எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவிடம் கேட்டபோது, ''இதுதொடர்பாக விசாரிக்கப்படும்'' என்றார்.